LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, January 11, 2019

கிழக்கு ஆளுனர் - பிரச்சினைக்கு யார் பொறுப்பு?


--- சீவகன் பூபாலரட்ணம் ---

கிழக்குக்கான ஆளுனராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்கள் நியமிக்கப்பட்ட விவகாரம் மட்டக்களப்பில் ஒரு ஹர்த்தால் நடத்தப்பட்டது வரையிலான நிலைக்குச் சென்று முடிந்திருக்கிறது.

இந்தக் ஹர்த்தால் வெற்றியா, தோல்வியா என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான கிழக்குத் தமிழ் மக்களின் தார்மீக உணர்வை குறைகூறமுடியாது.

இலங்கையில் நடந்துமுடிந்த அரசியல் நெருக்கடிகள், அடுத்தடுத்து வந்த ஆட்சி மாற்றங்கள் ஆகியவற்றால் குழம்பிப்போய் இருக்கும் இலங்கையின் ஏனைய மாவட்ட மக்களுக்கு இந்த விவகாரம் ஒரு பெரிய விடயமாக தென்படாவிட்டாலும், கிழக்கில் இந்த விவகாரம் கொஞ்சம் சூடான விடயந்தான்.

மூவின மக்களும் கிட்டத்தட்ட ஒரே அளவில் வாழுகின்ற கிழக்கு போன்ற மாகாணங்களைப் பொறுத்தவரை எவரை ஆளுனராக நியமிப்பது என்பது கொஞ்சம் இலகுவில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விடயந்தான்.

ஆளுனர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா
====================================

கிழக்கின் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளை விட கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் ஹிஸ்புல்லா அவர்களுடன் ஒப்பீட்டளவில் கொஞ்சம் முரண் போக்கையே கொண்டிருக்கிறார்கள். கடந்த காலங்களில் முஸ்லிம் - தமிழ் உறவுகளில் ஏற்பட்ட விரிசல்களும் அதன் காரணமாக தாம் புறக்கணிக்கப்பட்டதாகவும் இங்குள்ள தமிழ் மக்கள் நம்புவது இதற்குக் காரணம்.

நில ஆக்கிரமிப்புகள், தண்ணீர் போத்தல் தொழிற்சாலை போன்ற பல விடயங்களில் ஹிஸ்புல்லா அவர்கள் மீது கிழக்குத் தமிழ் மக்கள் கணிசமான சந்தேகத்தை கொண்டிருக்கிறார்கள். இவை சந்தேகங்கள்தான். ஆனால், அவை உறுதி செய்யப்படாதவை. ஆனால், சில வருடங்களுக்கு முன்னதாக வெளியான ஹிஸ்புல்லா அவர்கள் பேசுவதாகக் காண்பிக்கப்படும் ஒரு வீடியோதான் இவை எல்லாவற்றையும் விட தமிழ் மக்களுக்கு சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் கூறியவை சந்தேகங்கள். ஆனால் இந்த வீடியோ விவகாரம் தமிழ் மக்களுக்கு தமது இருப்புக் குறித்த ஒரு அச்சத்தை ஏற்படுத்திய ஒன்று. அந்த வீடியோ உண்மைத்தன்மையானதா, ஹிஸ்புல்லா அப்படி பேசினாரா என்ற விடயங்கள் வேண்டுமானால் ஆய்வுக்குரியவையாக கூறலாம். ஆனால், அந்த வீட்யோ தமிழ் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அவரோ அல்லது அரசாங்கமோ மறுக்க முடியாது. இதனை ஒரு இனப்பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒர் காணொளியாக தமிழ் மக்கள் பார்க்கிறார்கள். அதில் நியாயமில்லை என்றும் கூறமுடியாது.

ஆகவே அனைத்து மக்களுக்குமான ஒரு அரசியல் தலைவர் என்ற வகையில் ஹிஸ்புல்லா அவர்கள், தமிழ் மக்களின் அச்ச உணர்வைத் தணிக்க முயன்றிருக்க வேண்டும். அதற்கான தனது விளக்கத்தை இவ்வளவு நாட்களில் கொடுக்க விளைந்திருக்க வேண்டும். இங்கு அவரை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்ற தோரணையில் இந்தக் கருத்தைக் கூறவில்லை. ஆனால், மூவின மக்கள் வாழும் ஒரு பகுதியின் அரசியல் தலைவர் என்ற வகையில் சக இனமக்களின் நியாயமான அச்ச உணர்வை தணிக்க வேண்டிய கடமை அவருக்கு இருக்கின்றது. இந்தக் காணொளியை அவர் வெறும் சந்தேகத்துக்கு உரிய ஒன்று என்று கூறிக் கடந்து செல்ல முடியாது. இது அவர் தரப்பில் ஒரு பின்னடைவு.

முஸ்லிம் மக்களையோ, அல்லது கிழக்கைச் சேர்ந்த வேறு இன்னொமொரு இனத்தவரையோ கிழக்கில் ஆளுனராக போட முடியாது என்று எவராலும் வாதாட முடியாது. உண்மையில் கிழக்கை சேர்ந்த ஒருவர், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அங்கு ஆளுனராக நியமிக்கப்படுவது வரவேற்கத்தக்கதே. அவர் மீது சந்தேகம் இருக்கும் போதுகூட அவருக்கு அந்தப் பதவி வழங்கப்படலாம். ஆனால், இப்படியாக ஒரு சமூகத்துக்கு அச்ச உணர்வு இருக்கும் தருணத்தில், அந்த அச்ச உணர்வை நீக்காமல் இப்படியான மிகவும் முக்கியம் வாய்ந்த ஆளுனர் பதவிக்கு நியமிக்கப்படுவதை ஏற்கமுடியுமா என்று தெரியவில்லை. ஹிஸ்புல்லாவை பொறுத்தவரை இந்தக் காணொளி பற்றி அவர் பேசவில்லையாயினும், தான் அனைத்து மக்களுக்கான ஆளுனராக செயற்படுவேன் என்று பேசியிருக்கிறார். இனி அவர் செய்ய வேண்டியது இரண்டு விடயங்கள். ஒன்று தமிழ் மக்களின் அச்ச உணர்வு தொடர்பாக அவர் மனந்திறந்து பேசவேண்டும். அடுத்ததாக தனது எதிர்கால நடவடிக்கைகளில் மூவின மக்களுக்கான ஒரு நியாயமான ஆளுனராக தான் செயற்படுவேன் என்பதை செயற்பாட்டில் அனைவரும் உணரும்படி அவர் செய்ய வேண்டும்.

ஜனாதிபதியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும்
==========================================

ஆளுனர் நியமிக்கப்பட்டது ஜனாதிபதியால். தமக்கு எதிரான நடவடிக்கையாகவே ஹிஸ்புல்லாவை அவர் நியமித்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களாவது பேசியிருக்கிறார்கள். ஏனைய மாகாணங்களுக்கு அபிவிருத்தி அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போது, போரால் பாதிக்கப்பட்ட கிழக்குக்கு மாத்திரம் அப்படியான அமைச்சு நியமிக்க வழிசெய்யாததில் இருந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவறு ஆரம்பித்துவிட்டது. அதுவும் இதுவரை இல்லாமல், ஆட்சி மாறிய போது கிழக்கு தமிழர் ஒருவரை அந்த மாகாணத்துக்கான துணை அபிவிருத்தி அமைச்சராக நியமித்திருந்தும், ஆட்சி மீண்டும் மாறியதும், அந்தப் பதவியை இந்த ஆட்சி இல்லாது ஒழித்த போது வாழாவிருந்ததில் இருந்தே அவர்கள் சறுக்கத் தொடங்கிவிட்டார்கள். அதிலிருந்தே தாம் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு இங்கு கிழக்குத் தமிழர் மத்தியில் வளரத்தொடங்கிவிட்டது. அப்படியிருக்க, ஆளுனராக கிழக்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டமை அங்குள்ள தமிழ் மக்களுக்கு மனதில் பெரும் வேதனையை ஏற்படுத்திவிட்டது. நடப்புகள் இப்படியிருக்க, ஏனையவர்கள் மீதும், ஜனாதிபதி மீது குற்றஞ்சாட்டிக்கொண்டு இருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உரிய, பொறுப்பான நடவடிக்கை அல்ல.

ஹிஸ்புல்லாவிடம் அவர்கள் பேசினார்கள் என்பது மாத்திரம் கிழக்கு தமிழர்களுக்கு நம்பிக்கையை தந்துவிடாது.

அடுத்த விடயம், கிழக்கு தமிழ் மக்களுக்கு பெரும் அதிருப்தி ஒரு விடயத்தில் ஏற்பட்டிருக்கிறது என்ற நிலையில், அதனை களைய உரிய நடவடிக்கைகளை எடுக்காமல், சும்மா காரணம் மாத்திரம் சொல்லிக்கொண்டுதான் இன்றுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருந்து வருகின்றது.

இது கிழக்குத் தமிழர்களை அனாமதேய அழைப்புகளை ஏற்று ஹர்த்தாலுக்குச் செல்லும் அளவுக்கு தள்ளியுள்ளது. இதற்கான பொறுப்பான, போதுமான நடவடிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உரிய நேரத்தில் எடுத்திருந்தால், கிழக்குத் தமிழர்கள் “தாம் ஒரு அரசியல் அனாதைகள்” என்று எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். அனாமதேய அழைப்புகளை ஏற்று பலவீனமான ஒரு ஹர்த்தாலை நடத்த உந்தப்பட்டிருக்க மாட்டார்கள். இப்படியான நிலைமைகள் தொடர்ந்தால் இவை நாட்டில் இன ஐக்கியத்தை மீண்டும் குலைக்க வழி செய்துவிடும் என்பதை அனைவரும் எப்படி மறந்தார்கள் என்பது இங்கு வேதனையாகவே இருக்கின்றது.

அனாமதேய அழைப்புக்கள்
================

வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் மற்றும் ஏனைய இயக்கங்களின் காலங்களில் சில புதிய புதிய அமைப்புக்கள் மூலம் இயக்கங்கள் போராட்டத்துக்கு அழைப்பது பழகிப்போன ஒன்று. அந்தப் பாணியையே இன்னமும் தொடருவது தோல்விக்கே வழி செய்யும் என்பதை இந்த ஹர்த்தால் காண்பித்திருக்கின்றது. மட்டக்களப்பில் தமிழ் மக்கள் அழைப்பை ஏற்று ஆதரவு தந்திருக்கிறார்கள். ஆனால் ஏனைய இடங்களில் நிலைமை பிசுபிசுத்துவிட்டது.

மக்கள் அழைத்தவர் யார் என்று அறியாமலேயே ஆதரவு தந்தது அவர்களது விரக்தி நிலையை காண்பிக்கின்றது. ஆனால், அடையாளம் இல்லாத அமைப்புக்களின் பின்னர் செல்வது நீண்ட பாதையில் தோல்வியையே தரும். உண்மையில், தமிழ்மக்களுக்கு இந்த விடயத்தில் கவலை இருக்கிறது. அப்படியிருக்க போராட்டத்துக்கு அழைப்பவர்கள் வெளிப்படையாக முன்வந்து துணிச்சலுடன் அதனை முன்னெடுக்க வேண்டும். அவர்களின் பயம் நியாயமானதுதான். ஆனால், அந்த முயற்சி நீண்ட கால அளவில் வெற்றியை தருமா என்பது சந்தேகமே.

இங்குள்ள தமிழர் பொது அமைப்புக்கள் பலவற்றுக்கு ஆளுனர் விவகாரத்தில் விசனம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அவர்கள் வாய் மூடி இருப்பது மக்களை அனாமதேயங்களின் பின்பாகச் செல்ல நிர்ப்பந்திக்கிறது. முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் ஃபேக் ஐடிக்களை நம்பி பின் தொடர விளைபவர்களின் நிலைதான் இதுவும். அதுமாத்திரமல்ல, அனாமதேயங்களை தொடரும் போக்கு தவறான வழிக்கே இட்டுச் செல்லும். கட்டுப்பாடற்ற போராட்டமாக அது வழி தவறிப்போகும் நிலை ஏற்படலாம்.

இங்கு நான் எழுதுகின்ற இந்த விடயங்கள் இங்கு நான் விமர்சித்த அனைத்துத் தரப்புக்குமே கசப்பாக இருக்கலாம். ஆனால், இதனைச் என்னால் சொல்லாமல் செய்தியிடலை செய்ய முடியவில்லை. மக்கள் முன்பாக ‘ஹர்த்தால் பூரண வெற்றி’ என்று என்னால் சொல்ல முடியவில்லை. எனது நீண்டகால நண்பரான ஹிஸ்புல்லாவின் அரசியல் குறித்த விமர்சனத்தை தவிர்க்க முடியவில்லை. அவர் இந்த விமர்சனத்தை சாதகமாக எடுத்து நடவடிக்கை எடுக்க முயல வேண்டும். தமிழர்கள் தன்னை நம்பும் நிலையை ஏற்படுத்தி, உதாரண அரசியல்வாதியாக செயற்படவேண்டும். தமிழர்களின், கிழக்குத் தமிழர்களின் கட்சிகளாக தம்மை கூறுபவர்கள் மேலும் பொறுப்போடு நடக்க முயல வேண்டும். விடய ஆர்வம் இருந்தும் ஏதோ காரணத்துக்காக அனாமதேயமாக போராட்டங்களை முன்னெடுப்பவர்கள்கூட முறைப்படி களத்துக்கு வரவேண்டும். அனாமதேயங்களை மக்கள் தொடர்ந்து நம்பமாட்டார்கள். அவை பாதக விளைவுகளுக்கு வழி செய்துவிடும்.

மொத்தத்தில் இன ஐக்கியம் உடையவோ, ஒரு இனம் மாத்திரம் பாதிக்கப்படவோ இடம் தந்துவிடாதீர்கள்.




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7