
மெங் வான்சூவை தம்மிடம் கையளிக்கும்படி உத்தியோகபூர்வ வேண்டுகோளை அமெரிக்கா கனடாவிடம் விரைவில் முன்வைக்கவுள்ளதையும் எதிர்வரும் 30ஆம் திகதி காலக்கெடுவுக்குள் அதனை செய்து முடிக்க வேண்டியுள்ளதனையும் கனடாவுக்கான அமெரிக்க தூதர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், சீனா இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹூவா சன்ஜிங் கூறுகையில், “கனடா அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் மெங் வான்சூ விடயத்தில் தமது நாடுகடத்தல் ஒப்பந்தத்தினை துஷ்பிரயோகம் செய்கின்றன.
நீதியாக இந்த விடயத்தை நோக்கும் அனைவரும், இதில் கனடா மிகப் பெரிய தவறினை இழைக்கிறது என்பதனை உணர்ந்துகொள்ள முடியும். அத்துடன் அமெரிக்கா தனது தவறைத் திருத்திக் கொண்டு, இந்த கைது உத்தரவினை மீளப் பெற்று, நாடுகடத்தல் வேண்டுகோளை கைவிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
46 வயதான மெங் வான்சூ கடந்த டிசம்பர் மாதம் முதலாம் நாள், அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க கனேடிய அதிகாரிகளால் வன்கூவரில் கைது செய்யப்பட்டதுடன், ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையினை மீறும் வகையில் ஹூவாவி நிறுவனத்தின் ஊடாக அவர் செயற்பாடுகளை மேற்கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
