
அமெரிக்காவில் கடந்த 35 நாட்களுக்கு மேலாக நீடித்த அரசாங்கத்துறை முடக்கத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வர டொனால்ட் ட்ரம்ப் இன்று(சனிக்கிழமை) தீர்மானித்தார்.
இதற்கமைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை மீண்டு ஆரம்பிப்பதற்கான சட்டமூலத்தில் சபாநாயகர் நென்சி பெலோசி கையெழுத்திட்டுள்ளார்.
இந்த நிலையில் சுவர் அமைக்கும் திட்டத்தில் தேவை ஏற்படின் அவசரகாலத்தை பிரகடனப்படுத்துவதற்கும் தயார் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “மக்கள் அனைவரும் எல்லைச் சுவர் அமைக்கும் திட்டத்தில் என் வார்த்தைகளை கேட்பார்கள் என நான் நினைக்கின்றேன்.
இதில் சலுகைக்கான எந்த வழியும் இல்லை. மீண்டும் அரசாங்கம் நடைபெறுவதற்காக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்தத்துடன்தான் இதற்கு சம்மதிக்கிறேன்.
எல்லைச் சுவருக்காக நான் கேட்டுள்ள 5 தசம் 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவில்லை எனில் மீண்டும் பெப்ரவரி 15 ஆம் திகதியில் இருந்து அரசாங்கம் முடங்கும்.
எல்லைச் சுவர் எழுப்புவதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளப் போவதில்லை. நான் தெளிவாக இருக்கிறேன். ஒரு சக்திவாய்ந்த சுவர் அல்லது தடையை கட்டியெழுப்புவதைத் தவிர உண்மையில் வேறு வழியில்லை.
நாடாளுமன்றத்தில் நியாயமான உடன்பாட்டைப் பெறவில்லையாயின் பெப்ரவரி 15 ஆம் திகதி அவசர நிலைக்குத் தீர்வு காண அரசியலமைப்பின் கீழ் எனக்கு வழங்கப்படும் அதிகாரங்களைப் பயன்படுத்துவேன்“ என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறும் குடியேற்றவாசிகளை தடுக்க மெக்ஸிக்கோ எல்லையில் சுவர் எழுப்புவதற்காக 5 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்குமாறு ட்ரம்ப் கோரியிருந்தார்.
எனினும் அந்த கோரிக்கையை எதிர்க்கட்சிகள் நிராகரித்த நிலையில், நிதி ஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளிக்க ட்ரம்ப் மறுத்தார். இதனால் கடந்த 35 நாட்களுக்கும் மேலாக அமெரிக்காவில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் உட்பட செலவீனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் அரசுத் துறை செயலிழந்தது.
இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் எல்லைச் சுவர் தொடர்பான பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு 51 வாக்குகள் மட்டுமே ஆதரவாக கிடைத்ததுடன், அதற்கு எதிராக 47 வாக்குகளும் கிடைக்கபெற்றன. இந்த நிலையில் இன்று 35 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்த அரசுப் பணி முடக்கத்துக்கு ட்ரம்ப் முற்றுப்புள்ளி வைக்க தற்காலிகமாக தீர்மானித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
