ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக மாகாண சபைத் தேர்தலுக்குத் தயாராகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாகாண அமைப்பாளர்களுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“விரைவாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களது வாக்குரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாட்டினது ஜனாதிபதி என்ற வகையில் நான் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல் குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு இடம்பெறவேண்டிய மாகாணசபைத் தேர்தல்களைப் பிற்போடுவதற்கு சிலர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் தற்போது 6 மாகாண சபைகள் செயலிழந்துள்ளன. நாட்டினது ஜனநாயகத்திற்கு இவ்விடயம் சிறந்ததல்ல.
எனவே ஜனாதிபதித் தேர்தலிற்கு முன்னர் அனைவரும் மாகாணசபைத் தேர்தலிற்குத் தயாராக வேண்டும்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டார்.





