
ஹரியாணா மாநிலத்தில் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். கடந்த 1999 ஆம் ஆண்டு தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்ற குர்மீத் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் ராம் ரஹீம் தொடர்பிலான உண்மைகளை வெளியிட்ட ஊடகவியலாளர் ராம் சந்தர் சத்ரபதி 2002-ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார்.
அவரை ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் கொலை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதுதொடர்பான வழக்கு ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவிலுள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் குறித்த வழக்கில் இன்று(வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்த நீதிமன்றம், குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என தீர்ப்பளித்தது.
கடந்த முறை ராம் ரஹீமுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டபோது பெரும் கலவரம் வெடித்தது. அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து பஞ்ச்குலா மட்டுமின்றி ஹரியாணாவின் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
