கர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க முயற்சிப்பதாக அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.பெங்களூரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கிடையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக சதித்திட்டம் தீட்டப்படுவதாக அறியக்கிடைத்துள்ளது. எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேரம் பேசுவதன் மூலம் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க முயற்சிப்பதாக தெரிகின்றது.
ஆனால் எமது ஆட்சி தற்போது பாதுகாப்பாகவே இருக்கின்றது. எமது அரசுக்கு எந்தவித மிரட்டலும் இல்லை. பாரதிய ஜனதா யாரைத் தொடர்பு கொள்கிறது, என்ன தருவதாக சொல்கிறார்கள் என்பது எல்லாம் எனக்கு தெரியும்.
இவ்விடயத்தை முதலமைச்சர் என்ற ரீதியில் நான் கையாளுவேன். இவ்விடயத்தில் ஊடகங்கள் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும்” என முதலமைச்சர் குமாரசாமி மேலும் குறிப்பிட்டுள்ளார்.





