
இச்சம்பவம் புன்னாலைக்கட்டுவன் சந்தியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றது.
மனைவியை வானில் கடத்திச் சென்ற போது, பின்னால் மோட்டார் சைக்கிளிலில் கணவர் துரத்திச் சென்றதால் இந்த விபத்து இடம்பெற்றதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து கணவன் – மனைவி மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய குடும்பத்தலைவர் ஆகியோர் சுன்னாகம் பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை கொழும்பிலிருந்து வந்த இளம் குடும்பத்தலைவர் ஒருவர் வான் ஒன்றில் கடத்திச் சென்றுள்ளார். அந்தப் பெண் கடத்திச் செல்லப்படுவதைத் தடுக்க அவரது கணவர் முயற்சித்த போதும் இயவில்லை.
அதனால் வானை பின்தொடர்ந்து கணவர் துரத்திச் சென்றார். வான் புன்னாலைக்கட்டுவன் சந்தியில் பலாலி வீதியை திடீரெனக் கடந்த போது, எதிரே வந்த பேருந்துடன் விபத்துக்குள்ளாகியது. விபத்தில் வான் மற்றும் பேருந்து என்பன பலத்த சேதங்களுக்கு உள்ளாகிய போதும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
அத்துடன், வானை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த குடும்பத்தலைவரும் குறித்த விபத்தில் சிக்குண்டார்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விபத்துத் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர். விபத்தை ஏற்படுத்திய சாரதியையும் அவர்கள் கைது செய்தனர்.
இந்தக் கடத்தலுடன் தொடர்புடையவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதுடன், அவர் கொழும்பிலிருந்து வந்தே இந்தக் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
