
இதுவரை ஒரு வருடத்துக்கான 250 மணித்தியாலங்கள் மேலதிக பணி நேரத்தை 400 மணித்தியாலங்களாக அதிகரித்துள்ளதாக ஹங்கேரி அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனையடுத்து நேற்று (வௌ்ளிக்கிழமை) ஹங்கேரியில் கலவரமில்லாத முறையில் இந்த ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
ஹங்கேரியில் அதிக ஊதியம் பெற விரும்புகின்றவர்கள் அதிக மணித்தியாலங்கள் பணி புரியலாம் என பிரதமர் விக்டர் ஓர்பன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய பிறப்பிக்கப்பட்ட புதிய சட்டத்தின் கீழ், 1 வருடத்துக்கான 250 மணித்தியாலங்கள் மேலதிக பணிநேரத்தை 400 மணித்தியாலங்களாக அரசாங்கம் அதிகரித்துள்ளது.
அதேபோல், மேலதிக பணிநேரத்துக்கான கொடுப்பனவுகளை 3 வருடங்கள் வரை தாமதித்து வழங்க முடியும் எனவும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சட்டத்திற்கு வர்த்தக சங்கங்கள் பல எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், பாரிய பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாகவும் எச்சரித்துள்ளன.
இந்த நிலையில் பொது மக்களில் பலர் தொழிற்சங்கங்களுடன் இணைந்து அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஆயிரம் பேர் வரை கலந்துக்கொண்டு அமைதியான முறையில் தமது எதிர்ப்பை வெளியிட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்கள் சுலோகங்களை ஏந்தியவாறு ஜனாதிபதி மாளிகைவரை சென்று தமது எதிர்பை வெளியிட்டுள்ளனர்.
