உயிர்காப்பு உபகரணங்களுடன் எந்நேரமும் வாழவேண்டிய கட்டாயத்தில் இருந்த கனடாவைச் சேர்ந்த சிறுமியொருவருக்கு அவரது பிறந்த தினத்தன்று அபூர்வ பரிசாக இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்காக இதயம் ஒன்று நன்கொடையாக கிடைத்துள்ளது.எங்கு பயணித்தாலும் உயிர்வாயு (ஒக்ஸிஜன்) கொள்கலனுடன் செல்லவேண்டிய கட்டாயத்தில் அந்த சிறுமி வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு நன்கொடையாக மாற்று இதயம் ஒன்று கிடைத்துள்ளமை குறித்து அவளது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
கனடாவின் வின்சர் பகுதியில் வசிக்கும் மெக்கைலா (8) என்ற சிறுமிக்கு பிறக்கும் போதே அவளது இதயத்தின் இடது பாகம் முழுமையாக உருவாகவில்லை.
அதனால் எங்கு சென்றாலும் மெக்கைலாவின் வின் பெற்றோர் தங்களுடன் உயிர்வாயு கொள்கலன்களை எடுத்துச் சென்றனர். எங்கு சென்றாலும், உயிர்வாயு தீர்ந்து விடக்கூடாது என்பதற்காக, வீட்டுக்கு குறித்த நேரத்திற்குள் திரும்புவதிலேயே குறியாக இருந்துள்ளனர்.

மெக்கைலா இதய அறுவை சிகிச்சைக்காக கடந்த 480 நாட்களாக காத்திருந்த நிலையில், அவள் தனது எட்டாவது பிறந்த நாளில் கால் வைத்ததும் ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது, இது அவளின் பெற்றோரை பொருத்த வகையில் அபூர்வமான செய்தியாக உள்ளது.
இந்தநிலையில் 12 மணி நேர அறுவை சிகிச்சையின் பின்னர் மெக்கைலாவுக்கு புதிய இதயம் பொருத்தப்பட்டது. சில நாட்களிலேயே ஆச்சரியப்படும் விதமாக மெக்கைலாவின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அவள் மயக்கத்திலிருந்து வெளி வரவே சில வாரங்கள் ஆகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், வழமையாக எழுந்திருந்து தனது பணிகளை ஆறுதலாக செய்ய ஆரம்பித்து விட்டாள் என்று தந்தையான ஜஸ்டின் வார்டர் தெரிவித்துள்ளார்.





