430 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் வீடுகளும், உட்கட்டமைப்பு வசதிகளும், தொலைத் தொடர்பு சேவைகளும் இன்னமும் வழக்கம் போல் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன.
அனாக் க்ரகட்டு என்ற எரிமலை எதிர்பாராதவிதமாக வெடித்து குழம்புகளை வௌிப்படுத்த ஆரம்பித்த பின்னர் கடல் மட்டம் திடீரென உயர்ந்து ஆழிப் பேரலையை தூண்டியது.
இந்தநிலையில், இடைத்தங்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களில் பலர் தமது இருப்பிடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். சமீனா என்ற 53 வயதான குடும்பத் தலைவி ஒருவர் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றார்.
எனினும், அவரது வீடும் , இனிப்புக் கடையும் இடையளவு வௌ்ள நீரில் மூழ்கியுள்ளன. சமீனாவின் கணவர் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்ற நிலையில் அவருக்கு பொருளாதார ஒத்துழைப்பாக அந்த உணவு கடையை செயற்படுத்தி வருகின்றார்.
இந்த அனர்த்தத்திற்கு பின்னர் அவர் தனது உடைமைகளை மீளமைப்பதற்கு போதுமான பொருளாதாரம் இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கிறார். எனினும் இன்னும் ஒரு இனிப்புக் கடையை கடற்கரையோரமாக அமைப்பதற்கு அவர் அச்சம் கொண்டுள்ளார்.
அத்துடன் எதிர்காலத்தில் பாரிய ஆழிப்பேரலைகள் ஏற்பட்டு இன்னும் உயிர்ச் சேதங்கள் ஏற்படுமோ என்ற அச்சத்துடனும் தான் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இதுவரை 430 பேர் உயிரிழந்ததுடன், குறைந்தபட்சம் 159 பேர் காணாமல் போயுள்ளனர். சுமார் 1500 பேர் அனர்த்தங்களின் போது காயமடைந்துள்ளனர். அத்துடன் 21,000 பேர் உயரமான பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
