எனது நகரத்தை
மூதாதையர்களின் நிலத்திலிருந்து
பிரித்துவிட வேண்டுமென்று,
உருமாற்றமடைந்த
உங்களால் ஊகிக்க முடியாத
அவன் சொன்னான்.
அவன்
என் அறையில் ஆங்காங்கே
இடம் மாறும் பொம்மையுமல்ல
சன்னல் ஊடாக நுழைந்த
மாரிகால குளிருமல்ல
புனைவுகளோடு வந்து நிற்கும்
என் கவிதையுமல்ல.
மூதாதையர்களின் நிலத்திலிருந்து
எனது நகரத்தைப் பிரித்துவிடவேண்டுமென்று
அவன் சொல்வதற்கு
ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள்
அவன் வசமிருந்தன.
ஒரு பிரதியை
அவன் என்னிடம் முன் வைத்தான்
அப்பிரதியை
என்னால் திறந்து பார்க்க முடிந்தது
பிரதிக்குளிருந்து
குவியல் குவியலாக
நிர்வாண மனிதர்கள் வெளிவரத் தொடங்கினார்கள்.
