
சமவேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும், ஊதியக்குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், டி.பி.ஐ. வளாகம் முன்பு ‘கோரிக்கைகளை நிறைவேற்று’ எனும் கோஷத்துடன் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து பொலிஸாருடனான பேச்சுவார்த்தை தோல்வியடைய 1500 பேரை பொலிஸார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடைக்கப்பட்டனர்.
எனினும் அங்கிருந்தவாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ஆசிரியர்களில் இன்று 16 பேர் மயக்கமுற்ற நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று அரச தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும் என்றும், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என்றும் இடைநிலை ஆசிரியர்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து போராட்டம் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
