நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் சென்னை அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.கடந்த 5-ந்தேதி மாயமானார். இது தொடர்பாக அவரது மனைவி ஜூலி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார்.
அதில், “நண்பரை பார்க்க சென்ற எனது கணவர் திரும்பவில்லை. மர்ம நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு கணவர் பெயரில் உள்ள சொத்துக்களை அவர்கள் பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்” என்று கூறி இருந்தார்.
இதனால் பவர்ஸ்டார் சீனிவாசனை மர்ம கும்பல் கடத்தி சென்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து மிரட்டுவதாக தகவல் வெளியானது.
பவர்ஸ்டார் சீனிவாசன் மீது ஏற்கனவே மோசடி புகார்கள் உள்ளன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைதாகி இருந்தார்.
இதற்கிடையே பவர் ஸ்டார் சீனிவாசன் ஊட்டியில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறும்போது, பவர்ஸ்டார் சீனிவாசனுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசும்போது ஊட்டியில் இருப்பதாக தெரிவித்தார். அங்குள்ள பங்களாவை விற்பனை செய்வது தொடர்பாக அவர் சென்றுள்ளார். அவர் ஊட்டியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து சென்னைக்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளதால் பொறுமையாக இருக்கிறோம் என்றனர்.





