
மேகேதாட்டு அணைக்காக ஒரு செங்கலைக் கூட கர்நாடக அரசு வைப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்க மாட்டார் என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மேகேதாட்டு என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கு திமுக, மதிமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழக அரசின் அனுமதியின்றி ஒப்புதல் அளித்ததை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என, வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த விவகாரம் குறித்து மிக நன்றாக தெரியும். அவரும் ஒரு விவசாயி. அதனால், விவசாயிகளில் வாழ்க்கையில் ஒளியேற்றுகிற வகையில் காவிரி நீரை பெற்றுத்தருவதில் முதல்வர் வெற்றி பெற்றார்.
அதேபோன்று, மேகேதாட்டு அணை கட்டாமல் தடுப்பதிலே நிச்சயமாக வெற்றி பெறுவார். மேகேதாட்டு அணை கட்ட விட மாட்டார். அதில் ஒரு செங்கலைக் கூட வைப்பதற்கு அனுமதிக்க மாட்டார்.
சட்ட ரீதியான அனைத்து முயற்சிகளையும் அறிவுப்பூர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மூத்த சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று அவர் நடவடிக்கை எடுப்பார்" என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
