இரவுக்கு ஒளி தர ஒரு சந்திரன், எண்ணிவிட முடியாத எத்தனையோ விண்மீன்கள். ஆனால் பகலுக்கோ ஒரே ஒரு சூரியன்தான். நமக்குள் இருக்கும் ஒளியை உணர்ந்து கொள்ளாதவரை நாம் விண்மீன்களாகவும், சந்திரனாகவும் மினுமினுக்கத்தான் முடிகிறது. ஆனால் நாம் ஒளியின் மக்களாக அமைந்து விட்டால் சூரியனும் நமக்கு மெழுகுவர்த்திதான்!
சின்னப்பர் யூதன் என்கின்ற அகம்பாவத்தில் மூழ்கிக் கிடந்து, தன்னைப் பெரியவனாக உருவகித்து, இருளில் வாழ்கின்றோம் என்பதை உணராது, கிறீஸ்தவர்கள் வாழ்வை இருளப் பண்ணி வாழ்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில்தான் அவரது பார்வையைத் தடைப்படச் செய்கின்றார் இறைவன். இப்போது சவுல் எனப்பட்ட சின்னப்பருக்கு இருளின் தார்ப்பரியம் தெரியத் தொடங்குகின்றது. அவர் தான் அழித்தவிட முயலும் இறைவனின் முன்னால் தான் ஒரு அற்பன் என்கின்ற நிஜம் தெரிகிறது.
அதன் பிறகு அவர் தனக்குள் கண்டு கொண்ட ஒளி அவருக்குப் பார்வையை மட்டும் தரவில்லை, அவரைக் கண்டு ஒரு காலத்தில் அஞ்சியவர்களுக்கெல்லாமும் கூட அவரை ஒரு முன்னுதாரணமாக, வழிகாட்டும் ஒளி விளக்காக மாற்றியமைக்கின்றது. அவர் தன் பிறப்பின் பயனைக் கண்டு கொள்கின்றார். அவர் தன்னை அந்த மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்ள முன் வந்ததால் அந்த மாற்றம் அவரை உள்வாங்கிக் கொள்கிறது. அது அவருக்கு மட்டுமல்ல முழு உலகிற்கும் ஒளி கொடுக்கும் மனிதராக அவரை மாற்றியமைக்கிறது.
பவுல் அடிகளுக்கு கிடைத்த இந்த ஒளியின் தரிசனமும். மூன்று ஞானியருக்குக் கிடைத்த ஒளியின் தரிசனமும், பாமர இடையர்களுக்குக் கிடைத்த அந்த தரிசனமும் ஒன்றே! அந்த ஒளியின் தரிசனம் அவர்களோடே மட்டும் நின்று விடுவதில்லை. அது அவர்களுக்கு மட்டும் உரித்தானதொன்றுமல்ல. அது நமக்கும் உரியது. அந்த தரிசனத்தைக் கண்டடையும் ஆசையும், முயற்சியும் நம் வாழ்வில் இருக்குமேயானால் இயேசுவின் ஆசையினைப் பூர்த்தி செய்
தவர்களாக, ஒளியின் மக்களாக, மலை மேலே ஒளிர்கின்றவர்களாக நாம் மாறியமைய முடியும்.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்






