LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, November 8, 2018

ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்

நினைவுகளால்.

முதலாம் நிறுத்தத்தில்
நிற்கிறேன்
நீ சொன்ன
பேருந்து வந்துவிட்டது
நான் அதில் ஏறவில்லை

சன்னலுக்கு அருகில்
இருக்கை கிடைத்திருக்கிறது
நான் அதில் உட்காரவில்லை

நகரத்தின் நிசி கடந்திருப்பேன்
வித்தியாசமாக
இரண்டு பாதைகள்
நான் எதையும் தெரிவு செய்யவில்லை
எதை தெரிவு செய்தாலும்
பேருந்தை நடத்துனரே கொண்டு செல்லுவார்.

ஊரை விசாரித்துக் கொண்டிருக்கும் போது
பேருந்து அங்கும் இங்கும் அசையவில்லை
நான் வாசலில் விழப் பார்த்தேன்
ஒரு வாசகன் என்னை பிடித்துவிட்டான்

இது நகரத்தின்
கடைசி நிறுத்தமென நினைக்கிறேன்
புதிய வாசகன் ஒருவன்
வீடொன்றை காட்டித் தருகிறான்
பறவைகளின் ரெக்கைகளால் 
அது அமைக்கப்பட்டிருக்கிறது

இந்த வீட்டுக்கு ஏன்
பேருந்தில் ஏறமால் நினைவுகளால்
ஏறி வந்திருக்கிறேன்
நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்
கவிதையை இங்கு வைத்துதான்
நான் எழுதப் போகிறேன்


அத்து மீறல்.

மேசையில் கிடந்த
வெற்றுத்தாளில்
ஆழ்கடலொன்றை வரைகின்றேன்
அதன் உதடுகளில்
நதியொன்று ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதையும்
மழையின் இசையில்
குயில்கள் கூடுகட்டி
நூற்றாண்டு இயலாமையை
சரி செய்து கொண்டிருப்பதையும்
ஆதியின் விதிமுறைக்கு மாற்றமாய்
குயில்களின் கூட்டில்
காகங்கள் முட்டையிட தயாராகுவதையும்
நான் காண்கிறேன்
பெரும் காற்றின்
அத்து மீறலொன்றில்
ஓவியம் 
என்னைக் கடந்து சென்று
ஒரு வாரகாலமாய் நீளுகிற
மழையின் வாயில் விழுந்துவிட
மழை ஓவியத்தை தின்றுவிடுகிறது
சற்று நேரத்தில் 
கலைந்து பறக்க துவங்குகிறது
என் மஹா கனவு.


வளர்ப்பு பூனை.

வெளியே சுருண்டு 
படுத்துக் கிடந்த
எனது வளர்ப்பு பூனையை
மழைத் துளிகள் எழுப்பி விடுகின்றன.
பூனை
என் தலையணைக்கு
அருகில் படுத்துறங்க
வந்தமர்கிறது
பூனையின்
"மியாவ் மியாவ்" சப்தம்
பிடிப்பதில்லையென்பதால்,
நானோ
பூனையை 
அலமாரியில் தூங்க வைத்துவிட்டு
சிகரெட்டிற்கு பதிலாய்
நிலவை பிடித்து 
பற்ற வைத்து ருசி அருந்துகிறேன்
நான் இழுத்துவிட்ட
நிலவின் புகையில்
பூனையொன்று
உயிர்த்தெழுகிறது.


.எறும்புகளிடம்
எப்போதும் ஒரு ஆசை 
வளரத் தொடங்கியது

அருகிலிருந்த மலைகளை 
அது துரத்திக் கொண்டிருந்தது

மலைகளை 
தின்ன முடியவில்லை என
எறும்புகள் புலம்புகின்ற
ஆசை அது

மலைகளின் மேற்பரப்பில்
அடுத்ததாக
ஒரு சம்பவம் நிகழ்கிறது

பறவைகள் சில
மலைகளை தூக்கிச் செல்கின்றன
மன்னிக்க,
எறும்புகளை தூக்கிச் செல்கின்றன

முடிவுறா இக்காட்சியில்
எனது கவிதை 
மலைகளைப் போல் வளரத் தொடங்குகிறது
அதன் மேல்
பறவைகள் தூக்கிச் சென்ற
எறும்புகள்
சொற்கள் என ஊர்ந்து திரிகின்றன

எறும்புகள் மலைகள் என நினைத்து
எனது கவிதையை தின்றுவிடும் என அஞ்சி
இந்த கற்பனையிலிருந்து
எறும்புகளை 
ஒரு சில வருடங்களுக்கு
மிக தூரமாக வைக்கின்றேன்.

ஏ.நஸ்புள்ளாஹ்

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7