LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 9, 2018

தேன்மொழி தாஸ் மொழிகளின் தேவதை.

வாசிப்பு பிரதியை முன் வைக்கின்ற நிகழ்வுகள் அண்மைய சூழலில் மிக வேகமாக வளர்ந்து வருவதை காண முடிகின்றது.இது நவீன இலக்கியப் பிரதியை மேலும்  செம்மைப்படுத்துகின்ற அதைய நேரம் புனைவாளனின்  மனோநிலையையும் வாசிப்பாளனின் மனோநிலையையும் இணைக்கின்ற ஒரு ஊடகமாவும் எழுதின் தவத்தை குன்ற விடாமல் அதை சூழலுக்கேற்ப காலத்திற்கேற்ப தக்க வைத்துக் கொள்கின்ற ஒரு முயற்சியாகவும் ஏற்றுக் கொள்ள முடியும்.
                  ஒரு படைப்பு குறித்த விமர்சனங்கள் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெருகின்ற போது அந்தப் படைப்பை சூழலுக்கு தந்த புனைவாளனும் அதனை நெஞ்சினில் சுமக்கின்ற வாசிப்பாளனும் உத்வேகம் அடைகின்றார்கள் என்கின்ற விடயத்தில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.மிக கடினமான நேர நெருக்கடிக்கு மத்தியில் புனைவாளன் தனது அனுபவப் பிரதியை தருகின்றான் அதைய கடினமான நேர நெருக்கடியில் வாசிப்பாளன் ஒரு பிரதியை வாசித்து அவனுடைய மன அமைதிக்கான புதிய வாழ்வின் பக்கங்களை தேர்ந்தெடுக்க முயற்சிக்கின்றான்.இதனை ஒரு பிரதியை ஆழமாக வாசிக்கின்ற போது அந்த பிரதி தருக்கின்ற புனைவுக் கிளர்ச்சி அல்லது அழகியலிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
             இதில் இயற்கையின் வாசலை அதன் வெளியை ஒரு புனைவாளன் அன்றாடம் பருகும் போது கிடைக்கின்ற ஆனந்தம் சொல்ல முடியாத சங்கதி.அவ்வாறான இயற்கை சாரலை உடல் முழுவதுமாய் அன்றாடம் போர்த்தி அதனை அனுபவித்த தேன்மொழி தாஸின் கவிதைகள் அங்கு வாழ்கின்ற மக்களின் பாத்திரங்களாக மாறி நிற்கின்றன.அதனால்தான் தேன்மொழி தாஸின் பிரதிகள் வாசிப்பாளனுக்குள் உயிர்ப்பு பெறுவதோடு அந்த மலைதேசத்து மக்களது வாழ்வியலை அதனது பன்முகப் பக்கங்களை பேசுகின்றன
              தேன்மொழி போன்ற பொது நிலைக் கோட்பாடுகளுடன் எழுதும் படைப்பாளிகளுக்கு ஆங்காங்கே எதிர்வினை குரல்கள் எழாமலில்லை. குறிப்பாக பெண் படைப்பாளிகள் என்றால் வரையறை இருக்க வேண்டுமென்று சமூகம் புரிந்து வைத்திருப்பது மிகப் பெரும் கொடுமை.
             சமூத்தின் மீதான அக்கரையுடன் எல்லாப் படைப்பாளிகளும் தங்களது புனைவுகளை கொண்டு வருவதில்லை.எனினும் ரஷ்ய,ஈரான் போன்ற நாட்டுப் படைப்பாளிகள் புறக்கனிக்கப்பட்ட மக்களது எழுது கோல்களாக தங்களை மாற்றிக் கொள்வதும் பின் அந்த நாட்டு அரசுகளால் கைது செய்யப் பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும் மிகச் சாதாரணமாக நடந்தேறி விடுகிறது.
                நவீன புத்தாக்கங்களை கொண்டு வந்து பல்வேறு மனஉளச்சல்களுக்கு உள்ளான ஈரானிய கவிதாயினிகள் அல்லது இயக்குநர்கள் மரியம் மஜீத்,மன்ஹாஸ் மஹம்மதி போன்றவர்களின் படைப்பின் மிக நெருக்கத் தன்மையுடன் எழுதும் கவிதாயினியாக தேன் மொழியைப் பார்கிறேன்.இவரது கவிதைகள் பொதுவாக பெண் படைப்பாளிகளால் குரல் கொடுக்கப்படுகின்ற அல்லது முன்வைக்கின்ற சீதனம்,கல்வி,பெண் விடுதலை போன்ற செய்திகளை பேச முன்வரவில்லை.மாறாக சமூகத்தின் மீதான அக்கரையும் புறக்கனிக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப் பட்ட மக்களின் அரசியலைப் பேசுவதோடு அவர்களது வாழ்வியல் அவலங்கள் குறித்தும் கண்ணீர் குறித்தும் கேள்வி எழுப்புகின்றன.
             மரியம் மஜீத்,மன்ஹாஸ் மஹம்மதி போன்றவர்கள் சமூக விடுதலை குறித்து பேசிய தருணங்களிலெல்லாம் ஈரான் அரசால் கைதுசெய்யப்பட்டு அவர்களது குரல் உடைக்கப்பட்ட வரலாற்றைப் பார்க்கிறோம்.இது படைப்பாளிகளுக்கு தவிர்க்க முடியாத தண்டனை என்றே சொல்லத் தோன்றுகிறது.
            தேன்மொழி தனது படைப்புகளை ஒடுக்கு முறைகளின் உணர்வு வெளிப்பாடாக குரல் தருகிறார் .இனூடாக இவர் தனது எழுத்துக்கான அகன்ற வெளியை தெரிவு செய்கிறார்.இதுவே ஒரு படைப்பாளியின் காத்திரமான பங்களிப்பு எனச் சொல்லலாம்.
                   தேன்மொழி தனக்குள் தனிப்பட்ட மதிப்பீடொன்றை செய்து கொண்டு பிரதிகளைத் தருகிறார்.இது எழுத்துலகில் புதுவகையான பாய்சல் என்றே நான் சொல்லுவேன்.இவரது கவிதைகளை வாசிக்கின்ற போது தேன்மொழி ஒரு புது உலகத்தை மொழிக்குள் கொண்டு வரும் தேவதையாக நிமிர்ந்து நிற்கின்றார்.இவரது குறியீடுகளும் மொழிச் செதுக்கல்களும் தேன்மொழியின் கவிதைகளை விரும்பி வாசிக்கச் செய்வதோடு இவரது கவிதைகளுக்கான மதிப்பீடு ஒன்றையும் தருகின்றன.     
              தேன்மொழியின் கவிதை குறித்து நமக்கு உரையாடுவதற்கும் கருத்துக்களைப் பரிமாறுவதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன தேன்மொழியின் கவிதைகளை பேசும் போது இவர் யார் என்பதும் தேன்மொழியிக்குள் புதைந்து கிடக்கும் புதையல்களும் நமக்குத் தெரிய வரும்.இயற்கையையும் துயரங்களையும் தாண்டி அனுபவங்களின் பெரும் பாதையில் மிக மோசமான அரசியல் நெருக்கடிமிக்க சூழலையும் எவரோடும் சமரசம் செய்ய விரும்பாத ஒரு குரலையும் கண்டு கொள்ளலாம்.
                 தனது சிந்தனையை தூண்டிய தன்னைப் பாதித்த கோப குரலை இவர் தனது படைப்புகளில் ஓங்கி ஒலிக்க விட்டிருக்கிறார்.ஒவ்வொரு பிரதியையும் வரிகளுக்கு வலுச்சேர்க்க ஒடுக்கு முறையையும தன்னை பாதித்தவைகளையும்

சொல்ல முனைவதனூடாக புனைவாக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.அந்த புனைவுகள் வாசிப்பாளனிடம் கேள்விகளை தொடுக்கின்றன.அந்த கேள்விகள் வாசிப்பாளனை நிலைகுலையச் செய்கின்றன பின் ஓங்கி வெடித்து அந்த கேள்விகளின் உணர்வு சதா வாசிப்பாளனுடன் ஒட்டிக் கொண்டிருக்கிக்கிறது.தேன்மொழி இங்கு வாசிப்பாளனுடன் உட்கார்ந்துவிடுகிறார் என்பது எனது கணிப்பீடு.
             தேன்மொழியின் அதிகமான கவிதைகள் மறுவாசிப்பை வேண்டி நிற்கின்றன.அல்லது மறுவாசிப்புக்கான உணர்வை பதிவு  செய்வதோடு சிறந்த புரிதல் குறியீட்டையும் தருகின்றன.இவ்வாறான உணர்வை நமக்குள் பதிவு செய்வதற்கான காரணியாக அமைவது தேன்மொழி என்னேரமும் கவிதைகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான அடையாளமாக கருத முடியும்.தேன்மொழி கவிதைகளில் ஆர்ப்பாட்டமில்லாத மென்மையான மொழிகளை அலங்காரப்படுத்தியிருக்கிறார்.இவரது கவிதைகளில் தனித்த அழகியலும் இயற்கை சார் மனநிலையையும் காண முடிகின்றன.
           இவரது பிரதிகளில் அநேக புதிய உத்திகள் எக்ஸ்பெரிமென்டல் கவிதைகள் சுழல் கவிதை வகை பல மிகச் சிறந்த புதிய உத்திகள் யாரும் இதுவரை கையாளாத வடிவ வேறுபாடுகளையும் காணலாம்.
          தன்னுடைய வாழ்வியலில் உடன் வரும் இன்னும் தொடர்ந்து பயணம் பண்ணும் காட்சிகளை தன் கவிதைகளில் அடக்கி தனியிடத்தை நமக்குள் பிடித்து விடுகிறார் தேன்மொழி.அப்படி மிக வலிமை நிறைந்த கவிதையாக 'காட்டுப் பூக்களின் நாமங்கள்' கவிதையைச் சொல்ல முடியும்.

மலைகள் என்பது
சில பச்சைக் கூழாங்கற்கள் மூடுபனிக்கு
மிதித்துச் செல்கையில் 
அதன் பெருவிரல்களில்
காட்டுப் பூக்களின் நாமங்கள்
வெள்ளைத் தைலமாய்ப்
புறப்பட்டு விடுகின்றன.

இம்மலைகளில் இன்றி
வேறெங்கும்
வசிக்கயியலாத மரத்தின் உள்ளே
எனது நிலத்தின் அடையாளம்
வளர்ந்து கொண்டிருக்கிறது.

             காடும், மலையும் அது சார்ந்த இயற்கையுடனும் இளமைக் காலத்தில் வாழ்ந்த தேன்மொழி இன்றும் அதன் வாசனையில் உணர்வு மொழியாய் தருகிறார்.
          இவரது கவிதைகளை வாசிக்கின்ற ஒரு வாசிப்பாளன் இயற்கையை பருகாமல் மனதில் அதிர்வை சுமக்காமல் அந்தக் கவிதைகளில் இருந்து வெளியேற முடியாது.தொடர்ந்து வாசிக்கும் ஒருவன் நவீன மனதின் பிரதியை கண்டு கொள்வதோடு மொழியில் வேறுன்றி கவிதையின் அடர்த்தியில் ஆன்மா அங்கிருந்து வெளியே மறுத்து விடும்.
எத்தனை இயற்கையோடு வாழ்ந்தாலும் மீளாத் துயரத்தை தேன்மொழி அனுபவித்திருக்கிறார் என்பதற்கு இவரது பல கவிதைகள் நம்மைக் கடந்து செல்லும் போது கண்ணீரின் ஊர்வலத்தை வெறுமையின் பிடியில் நின்று கொண்டு பேசுகின்றன.
'பின் எப்படி நித்திரை என வந்தடையும்'என்கிற கவிதை.

சிலந்திகள் எனக்கு 
சுவர் அமைக்கத்
துவங்கிவிட்டன
மூளையின் திரவம்
இளகும் ஓசை
இன்னும் அதிகமாய்
வலுப்பெற்று இறங்குகிறது.
இடது விரலில்
வைக்கப்பட்ட
ஒரு துளி நீலமை
பாரங்கல்லாகி விட்ட
இவ்விரவை
மேலும் எப்படி அசைப்பது

            இந்தப் பிரதியில் தனிமனித உணர்ச்சி நிலைகளின் மொத்தக் கொதிப்பையும் காண முடிவதோடு இந்தப் பிரதி வாசிப்பாளனுக்குள் சலனங்களை தோற்றுவிப்பதையும் பாராட்டி வியக்காமல் இருக்க முடியாது.

ஒரு கோப்பையில் எனது
உயிரை ஊற்றி 
குடித்துவிட்டு
முடித்துவிட வேண்டும் போல்
இருக்கிறது சூசன்

          இந்தப் பிரதியில் நிர்ப்ந்தங்களின் தொன்மமான ஒரு சூழலை சவால் மிகுந்த சுயத்தின் கேள்விகளை உணர முடிவதோடு மனசின் உள்ளார்ந்த பெரும் வலியையும் பிரதி நிறுவப்பட்ட சந்தர்ப்த்தையும் நம் முன் காட்சிப்படுத்தலாக காண முடிகிறது.

90 முதல் 2010 வரை எழுதப்பட்ட எல்லா உடல் மொழிக் கவிதைகளும் காலாவாதியாகிவிட்தென உணர்கிறேன் 
                தேன்மொழி பெண் படைப்பாளி என்கின்ற வகையில் உடல் சார்ந்த கவிதைகள் பற்றிய ஒரு கருத்துப் பரிமாற்றத்தை இருவருக்குமான உரையாடலின் போது பகிர்ந்து கொண்டார்.
              "விடுதலை என்பது ஒரு தனிப்பட்ட உயிர் எதை அடைய விரும்புகிறது என்பது தான். எனில் பெண் அடைய விரும்புவது உடலின் விடுதலையா? அப்படி எனில் கட்டாயம் எனக்கு இல்லை, உடல் சார்ந்த விடுதலை தேவையில்லை .என் உடல் எனது ஆணுக்கு சொந்தமானது.மாறாக ஆண் பெண்ணின் மனதை உடலை சிதைப்பதை அதனால் ஏற்படும் மன இருக்கத்தை ஒடுக்கு முறையை பதிவுசெய்வதையே நான் விரும்புகிறேன். எனது ஆழ்மன உணர்வுகள் பிரபஞ்சத்தின் உட்கரு.நான் தாயாகவே இருக்க விரும்புகிறேன்" என்று இயற்கைக்குள் தாய்மையின் முழுமையான மனநிலையில் நின்று பேசுகிறார்.
           அப்பா கம்யூனிஸ கொள்கையில் மிகவும் ஆழ்ந்த பிடிப்புமிக்கவராக இருந்தால் வீட்டில் தெய்வப் படங்கள் வைப்பதையும் உருவ வழிபாட்டையும் அப்பா கடுமையாக கண்டித்தாக சொல்லும் தேன்மொழி வீட்டின் சுவர்களில் லெனின் காரல் மார்க்ஸ் ஏங்கல்ஸ் சிவப்பு நிறமென சிறுவயது முதல் வித்தியாசமான அனுபவத்தைப் பெற்றதால்தான் தனது கவிதைகளில் கம்யூனிஸ குரல் அனூடாகவே பரந்து விரிவதாகவும் தேன்மொழி நிறுவுகிறார்.மார்க்ஸின் புரட்சி இவரது கவிதைகளில் பிரதியாகுவதற்கு 
       இவரது உடலிலும் மனதிலும் புரட்சி இருப்தே காரணமென்று உரத்துக் கூற முடியும்
          உருவ வழிபாடு கூட தவிர்க்கப்படும் நிலையில் உடலை அதன் அசிங்க வார்த்தைகளோடு எழுதுவது ஈனச் செயலாகவே உணர்கிறேன் என்கிறார் தேன் மொழி.ஏனெனில் "எனது உடலை எழுத்தில் மறைக்கும் நான் வேறொரு பெண் உடலை எப்படி எழுவேன்" என்று கேள்வி எழுப்புகிறார்.
            எனினும் 2005 இல் தேன்மொழி ஒரே ஒரு உடல் மொழிக் கவிதை எக்பெரிமென்டல் கவிதையாக நமக்குத் தந்திருக்கிறார்.அதில் ஒரு ஆங்கில எழுத்தாளரின் நாட்குறிப்பின் வரிகள் இந்திய கவிதை மொழியின் கவிதை என சவாலோடு கவிதையின் இசைச் சுத்தம் மாறாமல் தந்திருக்கிறார்.தனது தாய் மொழி எத்தகைய மொழியின் படைப்பாளனையும் எதிர் கொள்ளும் என்பதனை இக்கவிதையினூடாக உட்படுத்திப் பார்க்கலாம்.
         இந்த கவிதை பிலிப் காஃப்மனின்  'ஹென்றி அன்ட் ஜுன்'(Hendry and june) எனும் திரைப்படத்தை அடிப்படையாக வைத்து எழுதியிருக்கிறார்.இக்கவிதை நீண்டதொரு கவிதை அதன் ஒருசிறு முன் பகுதி

Anais nin's diary.
--
நிர்வாண உடலின்
பூசப்பட்ட ஓவியங்களுக்கு
உள்ளேயும்
சுயநிறமிழக்காத
முலைகளைப் 
பார்த்துக் கொண்டே
வருகிறாள் அனைஸ்
எனக்குத் தெரியும்
கனிந்த ராஸ்லர்ரி
பழங்களை விடவும்
இனிமை மிக்கதொரு
அழகியின் முலைகளை
ருசித்தவள் இவளென
இரகசியங்கள் ஏதும்
மறைக்கப் படாத
நாட்குறிப் பேட்டின்
பக்கத்தில்
அவளைப் பற்றி அனைஸ்
இப்படி எழுதி 
வைத்திருக்கிறாள்.
எனக்குள் தீராத ஒரு
கொடுங் கனவு இருந்தது
அப்போதுதான் june
திடீரென இந்த நகரத்திற்குள்
திரும்பியிருந்தாள்.
நாங்கள் தாழிடப்பட்ட ஒரு
அறையில்
தனித்திருந்தோம்
அப்போது
ஆடைகளை
ஒவ்வொன்றாக
களையத் துவங்கினேன்.
........
........
......... என கவிதை விரிந்து இறுதிப்.பகுதி இப்படி முடிகிறது.

ரகசியமாக வேறொரு
மனிதனைச் சந்திக்கவும்
விரும்புகிறேன்
பாலுணர்வைத்
தூண்டக் கூடிய
அனேகக் கற்பனைச்
சித்திரங்கள்
என்னிடம் இருக்கின்றன
எனக்கு அவ்வின்பம்
தேவையாகவும்
இருக்கிறது.
            இப்படி முடிவுறும் கவிதை தேன்மொழியின் கற்பனைகளுக்கும் பரந்த நோக்கங்களுக்கும் ஒரு சவால் மிகு இடைவெளியை தருகிறது.இவர் பெண் உடல் திறந்து தனது பிரதிகளை தந்திருந்தால் சில நேரம் பேசப்பட்டு அக்கவிதைகள்  காலாவாதியாகியிருக்கலாம்.அதனை தேன்மொழி விரும்பவில்லை என்பதோடு இவ்வாறான சூழலில் இவர் வளரவில்லை என்பதும் நமக்குத் தெரிய வருகிறது.
         தேன்மொழியின் எழுத்துப் பயணம் என்பது கடலைப் போன்றதெனில் எனது உரையாடல் என்பது ஒரு சிறு தேநீர் குவளையில் அள்ளியெடுத்த நீர் போன்றது.தன் சுயத்தை இழக்காத இவரது விரிவான சமூக மாற்றப் பார்வை தேன்மொழியின் கலைப் பயணத்தில் வெற்றி பெற்றிருக்கிறது அதனாலேயே இவர் பேசப்படுகிறார்.தேன்மொழி கவிதை,சிறுகதை,சினிமா,தொலைக்காட்சி ஆகியவற்றில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பது எனது அவா.

ஏ.நஸ்புள்ளாஹ்.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7