
திண்ணையில் இறங்குகிறது
மழைக் குஞ்சுகள்
அவைகள் அமர்வதற்காக
உறங்கிக் கிடந்த பாத்திரங்களை
உடன் திறந்து வைக்கிறேன்
கூதலில் கொடுகியபடி
எனது மடியில் சுறுண்டு படுக்க
காலை சுற்றுகிறது வளர்ப்புப் பூனை
வீடு நனைந்து தொப்பாகியிருக்கும்
நெருக்கடி மீந்த தருணத்தில்
பொம்மைகள் வரையப்பட்டிருக்கும்
குடை வாங்கிக் கேட்டு
சினுங்குகிறது குழந்தை
தினசரி வாழ்வே குடையின்றி
காய்ந்துலர்வதை அவளுக்கு
எங்கணம் விபரித்துச் சொல்வேன்
அவளது பராக்கை திருப்ப
மழையை ரசிக்கும்படி சொல்கிறேன்
அதன் தாரைகள் மீட்கும் இசையினை
கூர்ந்து செவிமடுக்கச் சொல்கிறேன்
முன்றலில் குவிந்து கிடக்கும்
சிறு பொய்கையில்
காகிதப் படகு செய்து விடச் சொல்கிறேன்
இன்னும் கால் நலைத்து
விளையாடவும் சொல்லிப் பார்க்கிறேன்
எதற்கும் மசிவதாக தெரியவில்லை
குடை கேட்டு நச்சரித்தவாறே
மழையென அழுதது குழந்தை
மழை பெய்து ஓய்ந்து பின்னராக
குடையினை வாங்கிக் கொடு்க்கிறேன்
மீண்டும் மழை வேண்டிப் பிராத்தித்தது
மலக் கிடங்கு நிரம்பிய சேதிபற்றி
எதுவுமே அறிந்திராக் குழந்தை
ஜமீல்
