LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, November 12, 2018

வழிகாட்டல் ....13

ஆழ நடுக்கடலிலே தத்தளிக்கும் படகுக்கும் அதன் ஓட்டிக்கும் வான் நட்சத்திரம் வழி காட்டும்!

ஆந்தகார இருட்டினிலே தடுமாறுபவனுக்கு மின்மினிப் பூச்சி கூட வழி காட்டும் !.

பாதையைத் தவற விட்டவனுக்கு அறிவித்தல் பலகை வழிகாட்டும்! ஆனால் பாதை தவறியவனுக்கு யார் வழிகாட்டி? எது வழிகாட்டும்? கடவுளை நம்புபவனுக்கு வழிகாட்டி என்ற ஒன்று தேவையா? நாம் அறிந்த கதை ஒன்று இருக்கிறது. ஒருவன் தான் பட்ட, பட்டுக் கொண்டிருந்த வேதனைகளை யேசுவிடம் சொல்லி அழுது இந்த உலகில் நான் தனித்துப் போனேன், என்  கூட  யாருமில்லை என்கிற அளவுக்கு நான் நாதியற்றுப் போனேன். என்னோடு நீர் வரவேண்டும். நான் போகும் இடமெங்கும் கூடவே துணையாய் நீர் வரவேண்டும். அப்படி வருவதை நான் மண்ணிலே படியும் உமது காலடித் தடங்களைக் கொண்டு அறிந்து கொள்ள வேண்டும்.. என்று கேட்டுக் கொள்ளுகின்றான். தன் நீண்ட நாள் விசுவாசமுள்ள பக்தனுக்கு இறைவன் அவன் கேட்ட வரத்தைக் கொடுக்கிறார். 

அன்று முதல் தான் எங்கு போனாலும் யேசுவின் பாதச் சுவடுகள் தனது கால் சுவடுகளுக்குப் பக்கத்திலேயே வருவதைக் கண்டு மனம் ஆறுதல் கொண்டான். தான் போகின்ற பயணத்திலெல்லாம் யேசு கூடவே வருகிறார் என்ற அறிவு அவனுக்குப் புதுத் தெம்பை அளிக்கின்றது. தன்னை நோக்கி வருகின்ற பிரச்சினைகளுக்கு துணிவுடன் முகம் கொடுத்துக் கொண்டு தன் வாழ்வைத் தொடர்கின்றான்.

இருந்தும் ஒரு காலகட்டத்தில் அவனால் தாங்க முடியாதென்கிற அளவுக்குச் சோதனைகள் அவனைச் சூழ்கின்றன. தளர்ந்து போகின்ற அவன் தன்னோடு யேசு வருகின்றாரா என்று நிச்சயப்படுத்திக் கொள்ள திரும்பி ஒரு முறை பார்க்கின்றான். பார்த்தவன்; ஏங்கிப் போய்விடுகின்றான். அங்கே யேசுவின் சுவடுகளைக் காணவில்லை. ஒரேயொரு சோடிக் கால்களின் தடம் மட்டும் தெரிகிறது. அவனுக்கு அழுகை பொத்துக் கொண்டு வருகின்றது. யேசுவிடம் வாய்விட்டு அரட்டுகின்றான்' என் யேசுவே, என் கூடவே நடந்து வருவதாக வாக்களித்து, இதுவரையிலும் அதைப் பேணி வந்தீர்களே. இதோ தாங்கவொண்ணா துன்ப வேளையில் என்னைத் தனியாக நடக்கவிட்டு நீர் மட்டும் ஒதுங்கிக் கொள்ளுவது நியாயமா?' என்று புலம்புகின்றான். யேசு கூறுகின்றார்:'மகனே நன்றாக உற்றுப் பார். இங்கு நீ காண்பது உனது காலடிகளல்ல என் காலடிகளே! துன்பம் தாளாது சோர்ந்து போன உன்னை நான் தோள் மீது தூக்கிக் கொண்டு நடக்கின்றேன். அதுதான் ஒரு சோடிக் காலடிகள் தெரிகின்றன. இன்னும் உற்றுப் பார்த்திருந்தால் பாரத்தில் அழுந்திப் பதியும் என் கால் தடங்கள் உனக்கு உண்மையைப் புரிய வைத்திருக்கும்.' 

ஆபத்திலும் சரி எந்த வேளையிலும் சரி எமக்குப் பக்கத்துணையாக வரக் கூடியது இறைவன் ஒருவனே. எந்த இக்கட்டு எமக்கு வந்தாலும் எம்மை வழி நடத்திடும் தெய்வம் அவரே! நமக்குச் சரியான பாதை தெரியக் கூடியதாக உண்மை ஒளியை அவரால் மட்டுமே பிரகாசிக்கச் செய்ய முடியும். அந்த உண்மை ஒளியைத் தேடிச் செல்ல வேண்டியது நமது கடமை. அதைவிட்டு தூரத்தே தெரியும் நிச்சயமற்ற மங்கலான வெளிச்சத்தை நாடினால் அது எமது மடமை!

அதே சமயம் தற்காலிகமாக இறைவனின் ஒளியை நாடி விட்டு துன்பச் சூழல் கடந்த பிறகு இனி நம் வழி என்று தனி வழி தொடரப் புறப்பட்டோமானால் ஒரு கட்டத்தில் எந்த ஒளியையும் கண்டு கொள்ள முடியாத குருடராக நாம் மாறிவிடக் கூடும். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பலனில்லை!

நம் நெஞ்சம் கடவுளுக்காக, அவர் அருளுக்காக, அவர் காட்டக் கூடிய நல்வழிக்காக, அந்த வழியைக் காணக்கூடியதாக அவரில் மிளிரும்  ஒளிக்காக ஏங்க வேண்டும். அவர் நமக்குக் காட்டும் வழி தவிர்ந்த வேறு வழிகளெதுவும் நமக்குத் தேவையில்லை என்ற முடிவு நமக்குத் தேவை. இத்தகைய முடிவை எடுப்பது ஒரு சிரமமான பணியாக இருக்கவே செய்யும். ஆனாலும் சிரமப்பட்டு நாம் முடிவை வகுத்துக் கொண்டோமானால், நாம் எடுத்த முடிவு குறித்து என்றுமே வருந்த மாட்டோம் என்பது மட்டும் நிச்சயம். ஆந்த ஒரு நிலைக்கு மட்டும் நாம் வந்து விட்டோமானால் இறைவனின் குரலே நமக்குக் கேட்கும். அவரது வார்த்தைகளே நம் காதில் விழும். ஆவரை முன்னிறுத்தி நம் பயணத்தைத் தொடருவோமாகில் நம்மை நோக்கி வரும் எந்த துன்பத்தினின்றும் எம்மைக் காக்கின்ற கவசமாக அவரிருப்பார்.

அவரே கூறுகிறார், 'ஒரு ஆயன் - வழிகாட்டி - தலைவன் என்று கூறக்கூடியவன், மந்தையை அதன் கூட்டிலிருந்து திறந்துவிட்டு அவற்றிற்கு முன்னே குரல் கொடுத்துச் செல்வானேயல்லாது, பின் தங்கிவிடமாட்டான். அவனது மந்தைகளும் அவன் குரலை அடையாளம் கண்டு கொண்டு அது கூறும் மொழிகளை விளங்கிக் கொண்டு அவன் போகின்ற திசையெல்லாம் பின் செல்லும், அவனும் அவைகள் வளம்பெறும்படிக்கு பசும் புல் தரை நோக்கியும், நற்சுனை நோக்கியும் அவற்றை நடத்திச் செல்வான்.' என்று. இந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. அவரது வழிகாட்டுதலுக்கு ஏற்ப பின் சென்றவர்களுக்கு அவை உன்னதமான வழியாக அமைந்திருக்கின்றன.
நம்மில் பலரும் நமக்கு நாமே தலைவர்களாகச் செயற்படுவதுண்டு. தன்னம்பிக்கை உள்ள வாழ்க்கை அதுதான். ஆனாலும் எதுவரைக்கும் நம் தனி வழி தொடரப்போகின்றது? நம்மைப் போலவே தனித்துப் பயணிக்கின்றவர்கள் நம் எதிரே வந்துவிட்டால், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் மோதலில் அல்லவா அனைத்தும் முடிவடைந்து விடுகிறது? 

இறைவன் வழியோ மற்றவரை அணைத்துக் கொண்டு. விட்டுக் கொடுத்துப் போகும் வாழ்வை நமக்குக் காட்டித்தருகின்றது. துன்பமொன்று வரும்போது மற்றவர்களைப் பின்தள்ளி முன்சென்று முகம் கொடுக்கக் கூடிய துணிவையும், பலத்தையும் தருகிறது. ஜேத்செமனி தோட்டத்தில் ' என்னைத் தேடி வந்தால் இவர்களைப் போகவிடுங்கள்' என்று வந்த துன்பத்திற்கு அவர் தனித்து முகம் கொடுக்கவில்லையா? அதுதான் அவர் சொல்லித் தரும் தனித்துவமான வழி!

கண்ணை இறுகக் கட்டிக் கொண்ட நிலையில் சில மணி நேரம், சில மணி நேரம் என்ன? சில மணித்துளியளவாவது எம்மால் வாழ்ந்து விட முடிகிறதா? அந்தகாரம் நிறைந்த உலகைக் கண்டு கொண்டு இருக்கின்ற நாம் அதிலே வாழ உண்மை ஒளியைத் தேட வேண்டாமா? 'உலகமோ ஒரு நிமிடம் அதில் ஒரு வினாடி கூட நிம்மதியில்லை' என்பார்கள். 

இறை ஒளியில் திளைப்பவர்களுக்கு இந்த வார்த்தைகள் சரியாக அமைய முடியுமா?


ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்










 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7