கடலில் பயணிக்கும் கப்பலொன்று எத்தனை பெரிதானாலும் அதை நிறுத்தி வைக்க நங்கூரம் தேவையாயிருக்கிறது. அந்தக் கப்பலோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது அந்த நங்கூரத்தின் அளவு சிறியதாகத்தான் இருக்கிறது. இருப்பினும் கப்பல் எத்தனை பெரிதேயானாலும் அந்த நங்கூரம் அதைக் கட்டுப்படுத்துகின்றது.
நமது வாழ்வுக்கும் கடவுள் மீது கொள்கின்ற நம்பிக்கையும் ஒரு நங்கூரமாகத்தான் அமைகின்றது. வாழ்வு என்னும் கப்பல் நிலையாக, அசையாமல் இருப்பதற்கு அது உதவியாக இருக்கின்றது. அது பெரிதளவில் இருக்க வேண்டும் என்பதில்லை. கடுகளவு இருந்தாலும் போதும் அது நங்கூரம்தான்.
ஒரு முறை இயேசுவிடம் ஓடோடி வந்த தொழுநோயாளி ஒருவன் அவரின் காலடியில் விழுந்து அவரை அசைய விடாமல் பிடித்துக் கொண்டு தன்னைக் குணமாக்கும்படி அவரை வேண்டினான். அவர் மீது அவன் கொண்டிருந்த நம்பிக்கை இயேசுவைக் கட்டிப் போட்டது. அங்கு அந்த மனிதன் காட்டியது பக்தியல்ல : விசுவாசம் - நம்பிக்கை! அதுதான் அவனுக்கு நற்சுகத்தைக் கொடுக்கிறது.
எங்கே இரண்டுபேர் ஒருவருக்கொருவர் என்ற உண்மையன்புடன் வாழ்கின்றார்களோ, அவர்களைப் பிரிக்க யாராலும் முடியாது என்பார்கள். குடும்பமொன்றில் ஒரு தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள உறவு இப்படிப்பட்டதாக இருக்கும்போது அந்தக் குடும்பம் உறுதியானதாக, எந்தச் சலனத்துக்கும் இடம்கொடாததாக நங்கூரமிடப்பட்ட கப்பலாக அமைகிறதல்லவா? அதுபோலவே நமக்கென்று கடவுளும் கடவுளுக்கென்று நாமும் இருப்போமானால் நமக்கிடையே பிரிவென்பது இருக்கவே மாட்டாது. எந்தச் சூழ்நிலைதான் வந்தாலும், எத்தனை சோதனைகளைக் கண்டாலும், எவ்வளவு வேதனைகளை எதிர்நோக்கினாலும் கடவுளுக்கெதிரானவர்களாக.. அவரை விட்டுப் பிரிந்து செல்கின்றவர்களாக நாம் இருக்கப்போவதில்லை.
அன்பே நம் வாழ்வில் ஆணிவேராகவும், அடிநாதமுமாக அமைகின்றது. கடவுளையும் நம்மையும் பிணைத்து நிற்பது அந்த நங்கூரத்தை இணைத்து நிற்கும் சங்கிலியையொத்த கடவுளின் அன்பேயாகும். உண்மையான அன்பு ஆவியானவராகும். ஆவியானவரைப் பற்றி நாம் நிறையப் பேசுகிறோம்: ஆனால் எல்லோருமே அவரைக் கண்டதில்லை. அன்பு நம் கண்ணால் காண முடியாத சக்தியாக நம் வாழ்வு முழுவதிலும் எம் உயிர் மூச்சாகப் பரவிக் காணப்படுகின்றது. ஆனால் அதை நாம் அனுபவிக்கும் முறையில் காட்டுகின்ற தன்னலம் போன்ற தவறான அணுகு முறைகளால்தான் பிழைத்துப் போகிறது.
நாம் கடவுள் மீது கொண்டிருக்கின்ற அன்பை, நம்பிக்கையை, விசுவாசத்தை எல்லாப் பொழுதுகளிலும் நம்மை விடுவித்துக் காப்பாற்றும் சக்தியாக மட்டும் எண்ணி வாழக்கூடாது. அது எனக்குப் புறம்பே அமைகின்ற ஒரு சக்தியாக நினைத்து விடக் கூடாது. அது என்னோடே, எனக்குள் வாழ்வதால்தான் என்னால் பல பேரலைகள் மத்தியிலும் நிலை குலையாமல் உறுதியாக நிற்க முடிகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் கடவுள் எல்லா சந்தர்ப்பங்களிலும், நாம் எதிர்பார்ப்பதுபோல – நாம் வேண்டுவதைப்போல – ஒன்றிலிருந்து - ஒரு சிக்கலிலிருந்து நம்மை விடுவித்துவிடுவதில்லை. மாறாக நமக்குள்ளே உறையும் அவரது அன்பு நம்மை அந்த சந்தர்ப்பங்க;டாக சேதாரமின்றி பயணிக்க – எதையும் எதிர் கொள்ளத்தக்க உறுதியையும் பலத்தையும் நமக்குத் தருகிறார் என்பது அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ள எவராலும் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்.
கடவுளில் தங்கி வாழ்வதென்பது என்றுமே பலயீனமான ஒரு நிலையல்ல! குழந்தையும் தன் பெற்றோரில் தங்கி வாழத்தானே செய்கின்றது? அது அதற்கொரு பலமாகத்தானே அமைகின்றது. அவர்களின் உதவியுடன்தானே அது உலகைக் கண்டு கொள்கிறது அதற்கு முகம் கொடுக்கிறது? கடவுளை நம்பி வாழ்வதும் அவரது பலத்தை நாம் ஏற்றுக் கொள்வது போலத்தான். அப்படி ஏற்றுக் கொள்ளும்போது நாம் சேவிக்கின்ற – நாம் அன்பு செய்கின்ற – நாம் நம்புகின்ற எமது இறைவன் நாம் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள் ஏன் இந்த உலகைவிடவும் மிகமிகப் பெரிதானவர் என்கின்ற உண்மை நம் மனதில் வெளிச்சம் தரும்.
பல சந்தர்ப்பங்களில் நமக்கே நாம் யாரென்று தெரிவதில்லை. குழம்பிய மனத்தில் தெளிவு இருப்பதில்லை. எதிலும் கலக்கம்;, எங்கும் குழப்பம். அப்படியான வேளைகளில் நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற நம்பிக்கையெ நம்மை நாமே இனங்கண்டு கொள்ள முதன்மைக் காரணியாக அமைகின்றது. அதிலிருந்து தொடர்ந்து பார்த்துக் கொண்டு வந்தால் நாம் யாரென்பதைச் சுலபமாகக் கண்டு கொள்ளவும் நம் அடயாளத்தை உறுதி செய்து கொள்ளவும் முடியும்.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்
