காணாமலாக்கப்பட்ட உறவுகளைக் கண்டுபிடிப்பது ஒரு அரசியல் விவகாரம் எனவும் தமிழ் தேசியக் கொள்கையுள்ள அரசியல்வாதிகளாலேயே தீர்வைக் கொண்டுவர முடியும் என்றும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்படோரின் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சியை ஆதரிக்கவுள்ளதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்படோரின் உறவுகள் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்தார்.
மன்னாரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களைக் கண்டுபிடிப்பதற்கான தொடர்ச்சியான போராட்டம் இன்று ஆயிரத்து 262ஆவது நாளாகத் தொடர்கிறது.
நாங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பார்வையாளர்களாக இருக்க முடியாது. காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் தமிழர்களைக் கண்டுபிடிப்பது ஒரு அரசியல் விவகாரம். அதை தமிழ் தேசியக் கொள்கையுள்ள அரசியல்வாதிகளால் மட்டுமே தீர்க்க முடியும். இதனை சர்வதேச தலையீட்டின் மூலம் தான் தீர்க்க முடியும்.
நாம் தலைமையை மாற்ற வேண்டிய நேரம் இது. எங்களுக்கு இப்போது இரண்டு மாற்றுத்தலைமகள் உள்ளன. ஒருவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றையவர் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்.
கஜேந்திரகுமாரின் தலைமையைப் பார்க்கும்போது, அவரது கட்சியில் மூன்று இளம் வழக்கறிஞர்கள் உள்ளார்கள். அவர்கள் அதிக ஆற்றல் கொண்டவர்கள், சர்வதேச அரசியல் மற்றும் ஐ.நா. நடைமுறைகளில் மிகவும் அறிவுள்ளவர்கள்.
எனவே, தமிழர்களின் அரசியல் விருப்பத்தை தீர்மானிக்க பொது வாக்கெடுப்புக்குக்கும் சர்வதேச விசாரணைக்கும் யாரையும் ஒப்புக்கொள்ளக்கூடிய விவாதத்தை முன்வைக்க ஆற்றல் கொண்டவர்கள்.
அவர்கள் தமிழ் தேசியவாதிகள், அவர்கள் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பவர்கள், தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்திற்காக என்ன விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பவர்கள்.
அவர்கள் தமிழ் தாயகத்தில் பொருளாதார வளர்ச்சிக்காக பல திட்டம் கொண்டுள்ளவர்கள். அதைச்செய்ய தமிழ் புலம்பெயர்ந்தோர் வளங்களைக் கொண்டு வருவதாக அவர்கள் உறுதியளிக்கிறார்கள்.
பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகத்திற்காக தமிழ் தாயகத்தில் உள்ள வளங்களை பகிர்ந்துகொள்ள அமெரிக்கா அல்லது இந்தியாவுடன் பேரம் பேச அவர்கள் தயாராகவுள்ளனர்.
எனவே, கஜேந்திரகுமாரின் கட்சியை ஆதரிக்க விரும்புகிறோம். ஆகவே ஓகஸ்ட் ஐந்தாம் திகதி சைக்கிளுக்கு வாக்களிக்கவும். தமிழ் தேசியத்தை பாதுகாக்கவும்” என அவர் தெரிவித்தார்.
