கொரோனா பற்றிய விழிப்புணர்வு பரவலாக பரப்பப்பட வேண்டும் என்றும் தொற்று பரவாமல் தடுப்பதற்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று (சனிக்கிழமை) காணொலி வழியாக ஆலோசனை மேற்கொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொது இடங்களில் மக்கள் சுகாதாரம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும். கொரோனா பற்றிய விழிப்புணர்வு பரவலாக பரப்பப்பட வேண்டும். தொற்று பரவாமல் தடுப்பதற்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தலைநகர் டெல்லியில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் பாராட்டுக்குரியது. ஒட்டுமொத்த என்.சி.ஆர் பகுதியிலும் தொற்று நோயை கட்டுப்படுத்த மற்ற மாநில அரசுகளுடன் இணைந்து இதேபோன்ற அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நிதி ஆயோக் உறுப்பினர், அமைச்சரவை செயலாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.