LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, May 3, 2020

நெருக்கடியான சூழலில் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் பாதுகாக்க வேண்டும்- இதழியல் இயக்கம்

நெருக்கடியான சூழலில் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற தலைப்பில் மக்கள் இதழியல் இயக்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையில், “உலகம் முழுமையும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயால் கவலை, துயரம் மற்றும் நிச்சயமற்ற நிலையில் சிக்கியுள்ள இந்த நேரத்தில், அனைத்துத் துறைகளும் தமது எதிர்காலத்தை மாற்றி யோசிக்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றன.

இந்த நிலைமை ஊடகப் பணியையும் சற்று மாற்றி யோசிக்க வைத்திருக்கிறது. ஊடகத்துறை என்றுமில்லாத அளவிற்கு விமர்சனங்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகியிருக்கிறது. இடர்மிகுந்த இந்த நெருக்கடியை எதிர்கொள்ள, புரிந்துகொள்ள, சிந்திக்க மற்றும் சமாளிக்க இன்று உலகிற்கு இலவச தகவல் அவசியமாகிறது.

இந்தத் தகவல்களை பட்டிதொட்டியெங்கும் கொண்டு செல்லும் மகத்தான பணியைச் செய்தாக வேண்டியிருக்கிறது. நெருக்கடிமிகுந்த இந்தச் சூழ்நிலையில் தகவல் பரிமாற்றங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பொதுமக்களுக்கு சரியான, உண்மையான தகவல்களை வழங்குவதே நோயை எதிர்த்துப் போராடுவதற்கான வழியாகும். ஆனால், இந்த நெருக்கடியான சூழலில் வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள் அதிகளவில் பகிரப்படுவதால் தொற்றுநோய் அதிகரிக்கிறது மற்றும் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் அரசுகள் அதிகளவு அதிகாரத்தை கையிலெடுத்து ஊடகங்கள் மீதான அழுத்தத்தை பிரயோகிக்கின்றன. அடக்குமுறையை நடைமுறைப்படுத்துகின்றன. இதனால் எதிர்காலத்தில் எதேச்சதிகாரமான அரசுகளின் எழுச்சிகள் இலகுவாக நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்பதையும் மனங்கொள்ள வேண்டும். இந்தச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதும் மக்கள் நலன்சார்ந்த இதழியலை நோக்கி நகரவேண்டியதும் இதழியல் துறையின் பொறுப்பாக உள்ளது.

1. ஊடக சுதந்திர தினம்
ஒவ்வொரு வருடமும் பன்னாட்டு ஊடக சுதந்திர தினம் மே 3 ஆம் திகதி கொண்டாடப்படுவது வழமை. இந்த ஆண்டு அதற்கான வாய்ப்புக்கள் கொரோனோ வைரஸ் நோய் தொற்றுக் காரணமாக தவிர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பேரிடர் காலத்தில் ஊடகங்களின் பணிபற்றிய ஒன்லைன் விவாதங்கள் இந்த ஆண்டு அதிகளவில் நடக்கின்றன என்பதுடன் இனியும் நடக்கும்.

யுனெஸ்கோ நிறுவனம் இந்தாண்டு ஊடக சுதந்திர தினத்துக்கான கருப்பொருளாக ‘அச்சமோ பக்கசார்போ இல்லாத ஊடகம்’ என்பதைக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த ஆண்டிற்கான துணை கருப்பொருள்களாக ஆண், பெண் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, அரசியல் மற்றும் வணிக செல்வாக்கிலிருந்து சுதந்திரமான ஊடகம், தொழில்முறை பத்திரிகை மற்றும் ஊடகத்தின் அனைத்து அம்சங்களிலும் பாலின சமத்துவம் பேணப்படுவது போன்ற விடயங்களை முன்வைக்கிறது.

2. ஊடகத்துறையில் அரசியல் தலையீடு
ஊடகத்துறையில் அரசியல் தலையீடு அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. ஊடக நிறுவனங்கள் பல அரசில்வாதிகளின் கைகளுக்கு மாற்றப்பட்டமை மற்றும் அரசியல்வாதிகளே தமது சொந்த ஊடகங்களை உருவாக்கிக்கொண்டமை போன்ற காரணங்களால் இந்த நிலைமை அதிகரிக்கிறது. இலங்கையிலும் இந்த நிலைமையை அவதானிக்கலாம்.

இலங்கையைப் பொறுத்தவரையில் பிராந்தியப் பத்திரிகைகளின் மையமாக விளங்குகின்ற வடக்கில் ஊடகங்களில் அரசியல் தலையீடு என்ற நிலைமை அதிகரிப்பதை அவதானிக்க முடிகிறது. தனிநபர் புகழ்பாடுதல், தனிநபர் நலன்சார்ந்து சில பத்திரிகைகள் இயங்கத் தலைப்படுகின்றன.

இதேபோன்று கருத்தியல் ஆதிக்கமும் ஊடகத்துறை மீது திணிக்கப்படுகின்றது. இதில் அரசு சார்பு, அரச எதிர்ப்பு என்ற இரு நிலைப்பாடுகள் முனைப்புப் பெறுகின்றன. இதனால் எதிரும் புதிருமான தகவல்கள் பகிரப்படுகின்றன. மக்கள் குழப்பத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இந்தச் சூழலில் அரசியல் அழுத்தங்கள் அற்ற ஊடகத்தை வளர்த்தெடுக்க பாடுபட வேண்டியுள்ளது.

3. ஊடகங்களின் பொருளாதார நெருக்கடி
கொரொனோ வைரஸ் நோய்தொற்றுக் காரணமாக ஊடக நிறுவனங்கள் குறிப்பாக பத்திரிகைகள் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகின்றன. பெருவணிக நிறுவனங்களின் விளம்பரங்கள் கிடைக்கப்பெறாமை காரணமாக அதில் தங்கியிருந்த ஊடகத்துறை நெருக்கடியைச் சந்திக்கிறது. இன்றைய சூழலில் பத்திரிகைகள் பாரியளவு விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

இது மெல்லக் குறைந்து வரும் வாசகர் எண்ணிக்கையை திடீரென அதிகப்படுத்தும். குறிப்பாக கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்குச் சட்டம், நடமாட்டத்திற்கான மட்டுப்பாடுகள் காரணமாக பத்திகைகள் வாசகர்களிடம் சென்று சேர்வதில்லை. இதனால் பத்திரிகை வாசிப்புப் பழக்கம் அரிதாகிவிடலாம். பல பத்திரிகைகள் பக்கங்களைக் குறைத்துள்ளன. தமது இணைப் பதிப்புக்களை இடைநிறுத்தியுள்ளன.

அதேவேளை, தினப் பத்திரிகை இலத்திரனியல் வடிவத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. பத்திரிகைகளின் பாவனை அதிகரித்திருப்பதையும் இதிலும் இலவச பத்திரிகைகளின் பாவனை அதிகரித்திருப்பதும் அவதானிக்கப்படுகின்றது. இது நோய்தொற்றின் பயனான சாதகமான விடயமாக இருந்தாலும் பத்திரிகைத் துறைக்கான மேலதிக சுமையாகவே இருக்கின்றது.

எதிர்காலத்தில் இந்த பத்திரிகைகளை வருமானத்துறையாக மாற்ற வேண்டிய பணி சவாலானதாக இருக்கும். இருப்பினும் மாறிவரும் சமூகப் பழக்கத்தின் ஒரு பகுதியாக இலத்திரனியல் வடிவத்திற்கு ஊடகத்துறை மாறியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதற்கேற்றதாக ஆளனி உருவாக்கம் நடைபெற வேண்டும்.

4. அவதூறுச் செய்திகள்
இடர்மிகுந்த காலத்தில் ஊடகங்களில் தனிநபர் உரிமை மீறல்கள் அதிகளவில் நடைபெறுவதை இனங்காண முடிகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் பகிரங்கப்படுத்தப்படும் போது தனிமனித உரிமைகள் பேணப்படவில்லை என்பது பலரது குற்றச்சாட்டாகவுள்ளது. மேலும், நோய் தொற்றுக்குள்ளானவர்களின் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதால் பாதிக்கப்பட்டவர் சார்ந்த குடும்பங்கள் நெருக்கடிக்காளாகின்றன.

நோயைப் பரப்பினார்கள் என்று தனிநபர்கள் இழிவுபடுத்தும் நோக்கம் கொண்ட அவதூறு செய்திகள் அதிகளவில் ஊடகங்களில் பகிரப்படுகின்றன. அவர்கள் மீதான தாக்குதல்கள் அல்லது துன்புறுத்தல் அபாயங்கள் நீடிக்கின்றன. இந்தப்போக்கு அதிகரித்துச் செல்வதையும் காணமுடிகின்றது.

தமிழ் ஊடகப்பரப்பில் தனிநபர்களை அவதூறுப்படுத்தும் தாக்குதல்கள் தொடர்கதையாகத் தொடர்வதை அவதானிக்கலாம். பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளர் தொடக்கம் ஊடகவியலாளர்கள், சமூக ஊடக தகவல் பகிர்வாளர்களுக்கெதிராக இதுவிடயமான பொலிஸ் முறைப்பாடுகள் கடந்த காலத்தில் பதியப்பட்டுள்ளமை வேதனை தருகின்றது.

தனிநபர் அவதூறு முறைப்பாட்டுக்கான தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கான போதிய சட்டங்கள் இல்லாமை அவர்கள் தப்பிக்க வசதியாக அமைகின்றன. மற்றும் இவ்வாறான விடயங்களைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப பற்றாக்குறைகள் காரணமாக இழிவுபடுத்தல் பணிகள் தொடர்கின்றன. இதற்கான தகுந்த சட்டங்களும் தொழில்நுட்பங்களும் இலங்கையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். சட்டத்தை நாடுவதற்கான நட்பு ரீதியான அணுகுமுறைகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்காக சிவில் சமூகப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

5. ஊடகத்துறையில் பால்நிலை சமத்துவம்
ஊடகத்துறையில் பால்நிலை சமத்துவம் பேணப்பட வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கையாக நீடிக்கிறது. களத்தில் பெண் ஊடகவியலாளர்களின் எண்ணிக்க போதியளவில் இல்லை என்பது கவலையளிக்கின்றது. பணியில் இருக்கின்ற ஒருசில பெண் ஊடகவியலாளர்களும் தாம் ஆணாதிக்கத்தில் உள்ள ஊடகத்துறையில் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடுவதாகக் குறிப்பிடுகிறார்கள்.

பெண் ஊடகவியலாளர்கள் மீதான அழுத்தங்கள் தற்போதைய சூழ்நிலைகளில் மோசமாகிறது. பெண் ஊடகவிலாளர்களைப் பாதுகாப்பதற்கும் ஊக்கப்படுத்துவதற்கும் ஏற்றதான கொள்கைத் திட்டமிடல்கள் ஊடக நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட வேண்டும். பால்நிலை சமத்துவதைப் பேணுவதற்கு ஊடகத்துறை அதிகளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

6. ஊடகவியலாளர்களின் பொருளாதாரம்
கொரோனோ வைரஸ் நோய் தொற்று நெருக்கடியான சூழலில் ஊடகவியலாளர்களுக்கு பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது. பெரும்பாலும் ஊடகத் துறையில் களநிலைப் பணியாளர்கள் தினக்கூலிகளாகவே பணியாற்றுகிறார்கள். இதனால் தற்போதைய சூழலில் வருவாயின்றி நெருக்கடியான சூழலில் வாழ்கிறார்கள். இவர்கள் கவனிக்கப்பட வில்லை. வறுமையில் வாடுகிறார்கள். இவர்களுக்கான பாதுகாப்பான தொழில் வழிகாட்டல் உருவாக்கப்பட வேண்டும்.

குறிப்பாக ஊடக நிறுவனங்கள் தமது பணியாளர்களை பணியிலிருந்து முன்னறிவித்தலின்றி தூக்கியெறிய ஆரம்பித்திருக்கின்றன. இது தொழில் பாதுகாப்பு நடைமுறை இல்லாத காரணத்தால் சாத்தியமாகிறது. ஊடகவியலாளர்கள் பலர் தீடீரென பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகிறார்கள். இதனைத் தவிர்ப்பதற்கு தொழில் பாதுகாப்புக் கோட்பாடு வரையறுக்கப்பட வேண்டும். ஊடகவியலாளர்களுக்கான கொடுப்பனவு பட்டியலும் தயார்படுத்தப்பட வேண்டும். ஊடகத்துறை தனித்தொழிலாக அங்கீகரிக்கப்பட்டு கொடுப்பனவுப் பட்டியல் தயாரிக்கப்படுவதை வலயுறுத்திய 2019 ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது தமிழ் இதழியல் மகாநாட்டின் தீர்மானங்களை அரசாங்கம் நடைறைப்படுத்த வேண்டும்.

7. பத்திரிகைகளின் எதிர்காலம்
இன்று டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான வேகமான கட்டாய மாற்றம் காரணமாக வருவாய் குறைந்து வருகிறது அல்லது வீழ்ச்சியடைகிறது. இறுதியில் செய்தித்தாள்கள் செயற்பாட்டைக் குறைக்கவோ அல்லது நிறுத்தவோ கட்டாயப்படுத்தப்படலாம்.

இலங்கை வடபகுதி பிராந்தியப் பத்திரிகைகள் சில நிறுத்தப்படலாம். இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான நிபுணத்துவ ஆலோசனை பெறப்பட வேண்டும். இதற்காக நிபுணத்துவக் குழுவை நியமித்து ஆய்வுகளை உடனடியாக ஆரம்பித்தாக வேண்டும்.

8. மத நல்லிணக்கத்திற்கான பணி
கொரோனோ வைரஸ் தொற்று இலங்கையைப் பொறுத்தவரையில் பல சவால்களைக் கொடுத்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையிலான தகவல்கள் பரப்பப்படுகின்றன. மதங்களை நிந்தனை செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றையும் மதத்தையும் தொடர்புபடுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. மத வைபவங்களால் கொரோனா பரப்பப்பட்டதான பிம்பம் உருவாக்கப்பட்டு குறித்த சில மத அமைப்புக்களுக்கெதிரான விரோதம் ஊடகங்களால் வளர்க்கப்படுகின்றது.

இது ஒரு எதிர்க் கருத்தியல் யுத்தமாகத் தொடர்கிறது. அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் அமைக்கப்பட்ட சர்வமத அமைப்புக்கள் மத நல்லிணக்க அமைப்புக்களின் செயற்திறன் பற்றாக்குறை இது விடயத்தில் காத்திரமான நடவடிக்கையைத் தவறவிடுகிறது.

மத நல்லிணக்கததிற்காக நிதிக்கொடை நிறுவனங்கள் செலவிட்ட பெருந்தொகைப் பணம் விரயமாகியது எனலாம். பொறுப்புணர்வான தகவல் பகிர்வுக்கான அறிவை சமூக மட்டத்தில் வளர்த்தெடுக்க ஊடகங்கள் பாடுபட வேண்டும். ஊடகங்கள் சமய சார்பு நிலையாக பிரிந்திருந்து செய்திகளை வெளியிடுவதையும் கருத்தியல் அழுத்தத்திற்கு ஊடகவியலாளர்கள் ஆளாவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தளவில் ஈஸ்ரர் தாக்குதலின் பின்னரான சூழலிலும் இவ்வாறான மத விரோத தகவல்கள் ஊடகங்களால் பரப்பப்பட்டதையும் காணமுடிந்தது. இது மத நல்லிணக்கத்திறகு விரோதமான போக்காகும். ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா மற்றும் மேற்குலகின் பல பில்லியன் நிதி கடந்த பல ஆண்டுகளாக செலவிடப்பட்டும் இவ்வாறான நிலைமை தொடர்வது கவலை தருகின்றது.

குறிப்பாக, நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை நிலைநிறுத்துவதற்காக ஊடகங்களுக்கு பயிற்சியளிப்பதில் பல பில்லியன் பணம் செவிட்ட பின்னரும் பேரிடர் காலஙகளில் ஊடகங்கள் மத விரோத மற்றும் இன விரோத நிலைபாட்டைக் கொண்டிருப்பது அவதானிக்கப்படுகின்றது. இது நிதித் திட்டங்கள் குறித்து எதிர்வரும் காலத்தில் மாற்றி யோசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும். பொறுப்புணர்வான ஊடகங்களை வளர்த்தெடுக்க இணைந்த செயற்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

9. ஊடகக் கல்வி
களநிலை ஊடகப் பணிக்கான ஆளனியினரை உருவாக்கும் கல்வி தமிழ் ஊடகப் பரப்பில் போதியளவு இல்லாத ஒரு சூழ்நிலையே காணப்படுகின்றது. பல்கலைக் கழகங்களில் காணப்படும் தமிழ்மொழி மூலமான ஊடகக் கல்வி தகுதியானர்களை ஊடகத் தொழிலுக்கு அனுப்பத் தவறுகிறது என்பதை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பல்கலைக்கழக ஊடகக் கல்விக் கட்டமைப்பு ஊடகத் தொழில்துறைக்கான ஆளனியினரை உருவாக்கும் தெளிவான கட்டமைப்பை வடிவமைக்க முடியாமல் குழப்பத்தில் காணப்படுகின்றன. ஒரு கருத்தியல் சார்பு நிலையை வளர்த்தெடுப்பது பல்கலைக்கழக ஊடகக் கல்வி விரிவுரையாளர்கள் அரசியல் கட்சி சார்ந்தும் சில அமைப்புக்கள் சார்ந்தும் இயங்குவது, அதனைப் பகிரங்கப்படுத்துவது? தமது சார்பு நிலையை மாணவர்களின் மீது திணிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது அவதானிக்கப்படுகின்றது.

இது அடிப்படை விழுமியங்களைக் கற்பிக்கத் தவறுவதாகும். இதனால் அச்சமின்றிய சார்புநிலை அற்ற ஊடகங்களை வளர்த்தெடுக்கும் பணியில் ஊடகக் கல்வி தனது பங்களிப்பை வழங்கத் தவறியுள்ளது எனலாம். தமிழ் ஊடகக் கல்விப் புலமையாளர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். பல்கலைக்கழக ஊடகக் கல்வி நடுநிலைத்தன்மை கொண்டதாக அமையப் பாடுபட வேண்டும். பல்கலைக்கழக நிர்வாகம் நடுநிலையான சார்பு நிலையற்ற ஊடகக் கல்வியை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

முடிவாக..,
இன்று சமூகத்தின் இயங்கு நிலை பற்றி உலகில் வேறுபட்ட கண்ணோட்டம் உருவாகி வருகின்றது. சமூக இடவெளி சார்ந்து இது அமைகிறது போலும். ஒன்லைன் தொடர்பாடல் சார்ந்ததாக நகர்கிறது. இந்த நெருக்கடியால் ஊடகங்களின் பன்முகத் தன்மைக்கு அச்சுறுத்தலும் தாக்குதலும் நடைபெறுகின்றது. ஊடகச் சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு ஆகியவை நம் அனைவரையும் கவலையடையச் செய்கின்றன.

இதற்காக யுனெஸ்கோ ‘ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள், ஊடகங்கள், அரசாங்கங்கள் மற்றும் சட்டத் துறைகளைச் சேர்ந்தவர்கள், உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணிகளுடன் சேர்ந்து ஊடகவியலாளர்களுக்கும் அவர்களின் சுதந்திரத்துக்காகவும் உண்மைக்காகவும் போராடுகிறது’ என்று குறிப்பிடுகிறது.

இதேவேளை, கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் ஆக்கிரமிக்கிறது. அதேபோல வேகமாகப் பொய்களும் பரவி புழக்கத்தில் இருக்கின்றன. இது நோயை எதிர்கொள்தற்கு பெரும் சவாலாகவுள்ளது. இந்த ஆபத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் ‘தவறான தகவல்களின் வளர்ந்து வரும் எழுச்சியும் எங்கள் எதிரி’ என்று எச்சரித்துள்ளார். உலக சுகாதார அமைப்பு இது ‘இரண்டாவது நோய்’ என்று விபரித்துள்ளது.

இதனால் சார்பு நிலையற்ற அச்சமின்றிய ஊடகச் சூழலை உருவாக்க உறுதி பூணுவோம். தவறான நச்சுத் தகவல்களை நச்சு நீக்கம் செய்வதற்கு ஒன்று திரள வேண்டுவதோடு ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்கள் இதழியலை நோக்கி இணைந்து பயணிப்போமாக” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7