முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல் அனுஷ்டிப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
இதன்போது, மே 18ஆம் திகதி தங்கள் வீடுகளில் மாலை 06.00 மணி தொடக்கம் 07.00 மணி வரையான கால இடைவெளியில் சுடரேற்றி அஞ்சலிக்குமாறும் எமது உறவுகள் போர் அவலங்களுக்கு மத்தியிலே உணவுக்கு வழியின்றி வெறும் கஞ்சியை மட்டும் அருந்தி உயிர்காத்த கொடுமையை நினைவுகூரும் முகமாக அந்நாளில் ஒரு நேரம் கஞ்சியை அருந்துமாறும் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, அன்றைய தினம் ஏழு மணிக்கு, எல்லா ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களிலும் ஒரு நிமிடம் அல்லது இரு நிமிடங்கள் ஒலியை எழுப்பி அஞ்சலிக்குமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கி.துரைராசசிங்கம் மேலும் தெரிவிக்கையில், “முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை மே 18இல் நாங்கள் வழமையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆலயங்களில் பிரார்த்தனை, பூசை அதன்பின்னர் அன்னதானம் போன்ற நிகழ்வுகளுடன் அனுஷ்டித்து வருகின்றோம்.
இம்முறை கொரோனா வைரஸ் தொடர்பான சுகாதார நடைமுறைகளைப் பேண வேண்டியுள்ளதால் நாமெல்லாம் ஓரிடத்தில் கூடி இந்த அஞ்சலி நிகழ்வினைச் செய்யமுடியாத நிலையிலுள்ளோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அன்பர்கள் உங்கள் பிரதேசங்களில் இந்நிகழ்வுகள் சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடித்து நடைபெறுவதற்கு ஊக்கமளிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
இதனை வடக்கு கிழக்கிலுள்ள எல்லா தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிருவாகத்தினரும் கருத்திற்கொண்டு வடக்கு கிழக்கு எங்கிலும் இவ்விடயம் நடந்தேற உணர்வோடு சேர்ந்த உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் நாடி நிற்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.