 கொரோனா வைரஸை அடையாளம் காணக்கூடிய பி.சி.ஆர் இயந்திரங்கள் வடபகுதிக்கு அதிகமாகத் தேவை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸை அடையாளம் காணக்கூடிய பி.சி.ஆர் இயந்திரங்கள் வடபகுதிக்கு அதிகமாகத் தேவை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “கொரோனா நோய்த் தொற்றை அடையாளம் காண்பதற்கு பி.சி.ஆர். எனப்படும் உபகரணம் மட்டுமே எமது நாட்டில் பாவனையில் உள்ளது. இவற்றை அதிகப்படியாக கொள்வனவுசெய்ய வேண்டிய அவசர நிலை காணப்படுகிறது.
வட பிரதேசத்தில், கொரோனா நோயை அடையாளம் காணக்கூடிய உபகரணம் யாழ்ப்பாணம் நகரில் இயங்கத் தொடங்கியிருக்கின்றது. அது நல்ல விடயமாக இருந்தாலும் திடீரென ஏற்படும் அசாதாரண சூழலை சமாளிக்கக் கூடிய அளவுக்கு வடபகுதியில் உள்ள முக்கிய வைத்தியசாலைகள் அனைத்திலும் பரிசோதனைக்கான வசதிகள் உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும்.
இதை உடனடியாகக் கொள்வனவு செய்யாதவிடத்து பெருந்தொகையான நோயாளிகள் அடையாளம் காணப்படாமல் கிராம ரீதியில் கைவிடப்பட்டு அவர்களிடமிருந்து தொற்றுக்கள் பெருகி பாரிய அனர்த்தத்திற்கு எமது மக்கள் தள்ளப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்பதனை கருத்தில் கொள்ளவேண்டும்.
குறிப்பாக, சந்தேகத்திற்கு இடமான நோயாளிகளையும் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளையும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் பரிசோதனை செய்வதன் மூலமே கொரோனா நோயாளர்களை அடையாளம் காணக்கூடியதாக இருக்கும்.
சில சமயங்களில் அடையாளம் காணமுடியாத நிலை ஏற்படும் பொழுது அந்த நபரிலிருந்து ஏனையவர்களுக்கு தொற்று பரவுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே இந்தப் பரிசோதனைக் கருவிகள்தான் கொரோனா நோயை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றும். தனிமைப்படுத்தல் மட்டும் இந்த நோயை ஒழிப்பதற்கு போதிய நடவடிக்கையாக அமையாது” என்று குறிப்பிட்டார்.
 
                  



 
 




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
