LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, April 1, 2020

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு: யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம்!

மிருசுவிலில் எட்டுத் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இது குறித்து மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி மூன்று சிறுவர்கள் உட்பட எட்டுப் பேரை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த கஜபா அணியைச் சேர்ந்த சுனில் ரத்னநாயக்க என்னும் இராணுவச் சிப்பாய் அண்மையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட்டார்.

இவர் இந்தக் குற்றத்துக்காக 2015ஆம் ஆண்டு மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்ற அமையத்தினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர். மேலும் மேல்முறையீட்டின்போது ஐந்து பேர்கொண்ட உயர்நீதிமன்ற அமர்வினால் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டவர்.

இவருக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனை இலங்கை நீதித்துறையைப் பொறுத்தமட்டில் புறநடையான ஒன்றாகும். ஏனெனில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் இலங்கையில் சாதாரணமாக தண்டனை பெறாத குற்றங்களாகவே காணப்படுகின்றன. ஆகவே புறநடையாக வழங்கப்பட்ட இத்தீர்ப்பும் ஜனாதிபதியினால் இல்லாமல் ஆக்கப்பட்டு இருப்பது இலங்கையில் தமிழருக்கு எதிரான குற்றங்களுக்கு ஒரு போதும் நீதி வழங்கப்படமாட்டாது என்பதை மீளவும் உறுதிப்படுத்துகிறது.

அனைத்துலகும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சத்தில் உறைந்திருக்கும் சூழ்நிலையைப் பயன்படுத்தி சத்தமில்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த விடுவிப்பு நடவடிக்கையானது எத்தகைய ஒரு அவலமான சூழ்நிலையிலும் சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதிரான தனது கருத்து நிலையிலிருந்து ஒரு போதும் விலகப் போவதில்லை என்பதை மிகத்தௌிவாக உணர்த்துகிறது.

மக்களின் பாதுகாப்பற்ற அவலமான துன்பமான ஒரு சூழ்நிலையை தனது அரசியல் இலாபத்துக்காகவும் சிங்கள பௌத்த மேலாண்மையை இந்நாட்டில் நிலை நிறுத்துவதற்காகவும் பயன்படுத்திய இந்த இழிசெயல் தமிழ் மக்களாகிய எங்களை மிகுந்த விசனத்துக்கும் கோபத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.

இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்பதை இந்நிகழ்வு துல்லியமாக வெளிப்படுத்துகிறது. மேலும் இந்நடவடிக்கை தமிழ் மக்களுக்கான நீதி ஒரு போதும் உள்நாட்டில் கிட்டாது என்கின்ற எமது நிலைப்பாட்டையும் மீள உறுதி செய்கிறது.

ஆகவே இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி சர்வதேசத்தின் கரங்களிலேயே இருக்கிறது என்பதை நாங்கள் மீளவும் வலியுறுத்த விரும்புகிறோம். தமிழ் மக்கள் நீதி பெறுவதற்கான ஒரே வழி சர்வதேச குற்றவியல் பொறிமுறைகளே என்பதை நாங்கள் உறுதியோடு வலியுறுத்துகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7