போராடவே வேண்டும் என்றால் மக்களின் பிரதிநிதிகள் எதற்காக என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், “யுத்தம் முடிந்து 10 வருடங்களுக்கு மேலாகியும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் அவர்களின் அபிலாசைகளுக்கும் ஒரு தீர்வைப் பெற்றுத்தராத தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதற்குப் பிறகும் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இருக்குமாயின் தமிழ் மக்களின் சாபக்கேடு என்று தான் கூறவேண்டும்.
யுத்தத்தின் பின்னர் முதல் ஐந்து வருடங்கள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியும் அடுத்த ஐந்து வருடங்கள் மைத்திரி மற்றும் ரணில் இணைந்த நல்லாட்சியுமாக மொத்தம் பத்து வருடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக சாதித்தது என்ன?
மக்கள் தங்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக தாங்களே போராட வேண்டுமாயின் மக்களின் பிரதிநிதிகள் எதற்காக?
தமிழ் மக்களிடம் ஒரு முகமும் சிங்களத் தலைமைகளிடம் இன்னொரு முகமும் காட்டிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் தொடர்ந்தும் வாக்களித்து, தமிழ் மக்கள் அதன் விளைவையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில், தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத்தான் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தார்மீகக் கடமையும் பொறுப்பும் தகுதியும் இருக்கின்றது.
எனவே அனைத்து அமைப்பினரும் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு அணியாக இணைந்து செயற்பட்டு ஒரு மாற்றத்தைக் காண்பது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது” என்று தெரிவித்துள்ளார்.