(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
இன்றைய உலகில் போதைவஸ்து பாவனையாக கையடக்கத் தொலைபேசியே முதன்மையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது என கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் இயங்கும் விநாயகபுரம் பவள மல்லிகை முன்பள்ளியின் வெள்ளி விழா மற்றும் புதிதாக முன்பள்ளியில் இணையும் மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் முன்பள்ளி வளாகத்தில்இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-
தற்போது சிறு குழந்தைகளுக்கு சிகை அலங்காரம் மாற்றப்பட்டு வருகின்றது. இதே பழக்கம் பாடசாலையிலும் வருகின்றது. அழகுக்காக பழகத்தினை ஊட்டுவோமானால் அந்த பழக்கமே அடுத்த கட்ட நகர்வுக்குள் கொண்டு சென்று விடும். பெற்றோர்கள் உங்களது பிள்ளைகளை ஒழுக்கத்துடன் கூடிய கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்க முனைய வேண்டுமே தவிர சிறுவயதிலே ஆசைக்காகவும், அவர்களது போக்குக்காகவும் துணை போகக் கூடாது.
தற்போது நாட்டில் ஏதோவோரு பொருளை போதைவஸ்து என்று கூறிக் கொண்டிருக்கின்றோம். இன்றைய உலகில் போதை வஸ்து தொலைபேசி பாவனை. பெற்றோர்கள் சிறு குழந்தைகளுக்கு தொலைபேசி ஊடாகவே குழந்தைகளது பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றோம்.
அழுது கொண்டிருக்கும்; குழந்தைக்கும், தங்களது வேலைகளை இடையூறு செய்யாமல் இருப்பதற்கும் தொலைபேசி வழங்கி குழந்தைகளை தொலைபேசிக்குள் தள்ளி விடுகின்றோம். உங்களது குழந்தைகளை நல்ல வழியில் உருவாக்குவது உங்களது கைகளில் மாத்திரம் தங்கியுள்ளது.
எங்களுக்கு கிடைத்திருக்கும் குழந்தைச் செல்வங்களை நாட்டின் நாளைய தலைவர்களாக, நாளைய உலகை செதுக்குகின்ற சிற்பிகளாக உருவாக்குவது பெற்றோர்களின் முதல் கடமை. இதைத்தான் பெற்றோர்களிடம் இருந்து சமூகம் எதிர்பார்க்கின்றது.
பெற்றோர்களின் ஒத்துழைப்பின் ஊடாகவே முன்பள்ளி மாணவர்களின் கல்வியை முன்னெடுக்க முடியும். பிள்ளைகளுக்கு கல்வியை மாத்திரம் கற்றால் போதும் என்ற எண்ணம் எமக்குள் வரக்கூடாது. ஒழுக்கத்துடன் சேர்ந்த கல்வி உண்மையாக சமூகத்தில் பாராட்டப்படுகின்றது.
ஒழுக்கம் இல்லாத ஒருவர் கல்வியில் எவ்வளவு முன்னேற்றம் கண்டாலும் சமூகத்தில் மதிக்கப்படுவதில்லை. சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கின்ற வாழ்வியல் விழுமியங்களை சிறுபராயத்தில் இருந்து பழக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் நல்ல பண்புகளை கடைப்பிடிக்க முனைவார்கள் என்றார்.
பவள மல்லிகை முன்பள்ளியின் பொறுப்பாசிரியர் திருமதி.கவிதா காசிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் திருமதி.பத்மலோஜினி லிங்கேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர் சி.தர்மலிங்கம், பிரதேச சபை சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.ஹாரூன், விநாயகபுரம் கிராம சேவகர் ஜெ.கிருஷாந், சமூர்த்தி உத்தியோகத்தர் க.இதயராஜா, வாழைச்சேனை பிரதேச செயலக உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.தியாகவர்மன் விஜிதா, விநாயகபுரம் பொது நூலகத்தின் பொறுப்பாளர் ந.புலேந்திரன், கல்மடு இளம்பருதி சனசமூக அபிவிருத்திச் சங்க தலைவர் எஸ்.காசிநாதன் உட்பட பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது முன்பள்ளி பாலகர்களின் வரவேற்பு நடனம் உட்பட்ட கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பவள மல்லிகை முன்பள்ளியின் இருபத்தைந்தாவது வருட நிறைவு வெள்ளி விழாவினை முன்னிட்டு வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித்தினால் நினைவுப்படிகம் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
அத்தோடு இவ்வருடம் புதிதாக முன்பள்ளியில் இணையும் மாணவர்கள் அதிதிகளால் வரவேற்பு வழங்கப்பட்டதுடன், கலந்து கொண்ட அதிதிகளுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.