
வாழ்வில், புதிய ஆளுநர் அனுராதா யஹம்பத் ஒளியேற்ற வேண்டுமென அந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கிழக்கு மாகாண ஆளுநராக இம்மாதம் 4ஆம் திகதி நியமனம் செய்யப்பட்ட அனுராதா யஹம்பத், இன்று (வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் புதிய ஆளுநரை வரவேற்றுள்ள முன்னாள் முதலமைச்சர், அது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஆயுதப் போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் மூவினங்களையும் சேர்ந்த விதவைப் பெண்களும், குடும்பத்தைத் தலைமை தாங்கும் பெண்களும் இன்றுவரை சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
போர், இன வன்முறைகள், போன்ற மனித அழிவுச் செயற்பாடுகளிலும் சுனாமி, பெரு வெள்ளம், அடை மழை, வறட்சி போன்ற இயற்கை இடர்களிலும் இந்தப் பெண்கள் சிக்கித் தவித்து தமது ஜீவனோபத்தைத் தேடிக் கொண்டுள்ளார்கள்.
கிழக்கு மாகாணத்தில் இவ்விதம் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த சுமார் 49000 பேர் உள்ளார்கள்.
இத்தகைய பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு விமோசனம் அளிக்கக் கூடியதான தொழில் முயற்சிகளைத் தொடங்க புதிய ஆளுநர் ஊக்கமும் உதவி ஒத்தாசையும் வழங்க வேண்டும்.
அதேவேளை பாதிக்கப்பட்ட மூவினப் பெண்கள் ஊடாக கிழக்கில் சமாதான, சகவாழ்வை தோற்றுவிக்கும் முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
சிறந்த ஆளுமை கொண்ட, தீர்க்கமான முடிவெடுக்கக் கூடிய, சகல இனங்களையும் சமமாக மதிக்கும் ஒரு ஆளுநராக நீங்கள் உங்களது பதவிக் காலத்தை மிளிரச் செய்வீர்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.
