நாம் ஒன்றிணைந்து உழைப்போம் என பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு செல்லும் கர்தார்பூர் பாதையை இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, இதற்காக உழைத்தமைக்காக இம்ரான் கானுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் கர்தார்பூர் பாதையை இன்று திறந்து வைத்து உரையாற்றிய அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், “குருநானக் தேவின் 550ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சீக்கிய மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கர்தார்பூர் பாதை பணிகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்து வைத்தமைக்காக உங்களுக்கும் பாகிஸ்தான் அரச அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதநேயமும் நீதியும் தான் மிருகங்களிடம் இருந்து மனிதர்களை வேறுபடுத்தி காட்டுகின்றன. சூழ்நிலைக்கேற்ப பொருந்திக் கொள்வது மனிதநேயமல்ல.
கடவுள் நமது இதயங்களில் குடியிருக்கிறார். மக்களை நீங்கள் மகிழ்வித்தால் கடவுளை மகிழ்வித்ததாகும். இங்கு வந்துள்ள சீக்கிய மக்களின் மகிழ்ச்சியை கண்டு நானும் மகிழ்கிறேன்.
தென்னாப்பிரிக்காவை தாக்கிய நிறவெறியால் அந்நாடு முற்றிலுமாக பிளவுபட்டது. அங்கு அமைதியும் நீதியும் உருவாகும் என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை. அங்கு ரத்த ஆறு ஓடும் என அனைவரும் நினைத்தனர்.
ஆனால், அதற்கு மாறாக ஒரு தலைவர் 27 ஆண்டுகள் தன்னை சிறைக்குள் வருத்திக்கொண்டு மக்களை ஒன்றிணைத்துக் காட்டினார். நான் இரண்டு விடயங்களை கூற விரும்புகிறேன். ஒரு தலைவர் எப்போதுமே மக்களை ஒன்றிணைப்பார். அவர்களை பிரிக்க மாட்டார். ஒரு தலைவர் எந்நாளும் வெறுப்புணர்வை விதைக்க மாட்டார்.
இதேவேளை, இந்தியா பக்கமுள்ள எல்லையை பாகிஸ்தான் திறக்க வேண்டும் என நவ்ஜோத் சித்து என்னிடம் கேட்டுக்கொண்டார்.
நான் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக வறுமை ஒழிப்பு மற்றும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவது தொடர்பாக நரேந்திர மோடியிடம் பேசினேன். காஷ்மீர் பிரச்சினையை பக்கத்து வீட்டுக்காரர்கள் போல் அமர்ந்துபேசி தீர்த்துக் கொள்ளலாம் என அவரிடம் நான் கூறினேன்.
நாம் இனி மனிதர்களாக இருப்போம் என்பதை மோடிக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன். சாத்தியமானவற்றை மட்டும் சிந்தித்து வறுமை, கல்லாமை ஆகியவற்றை ஒழிப்பதற்கு ஒன்றிணைந்து நாம் உழைப்போம்.
ஜெர்மனியும் பிரான்சும் முன்னர் போரில் சண்டையிட்ட நாடுகள்தான். ஆனால், அவர்களை இப்போது பாருங்கள். எல்லை கடந்த அவர்களது நட்புறவும் வர்த்தகமும் வளர்ந்து வருவதை பாருங்கள். நமது துணைக்கண்டத்திலும் இதுபோன்ற வளர்ச்சியை நான் காண விரும்புகிறேன்” என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.