
கொள்கலன் லொறி ஒன்றில் இருந்து 39 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வியட்நாமில் வைத்து குறித்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக வியட்நாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதற்கு முன்னர் செஷயரின் வோரிங்டனைச் சேர்ந்த 38 வயதுடைய ஆணும் பெண்ணும் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன், சாரதியும் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டுள்ள சாரதிக்கு எதிராக ஆட்கடத்தல், குடிவரவு விதி மீறல் மற்றும் 39 கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சாரதி டப்ளின் உயர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சடலமாக கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீன பிரஜைகள் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், அவர்கள் அனைவரும் வியட்நாம் பிரஜைகளாக இருக்க கூடும் என பிரித்தானிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரித்தானிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
