தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ராணுவ வீரர்கள் 24 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் மேலும் 29 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களை ஒடுக்குவதற்காக, மாலி மற்றும் நைஜர் ராணுவம் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, மாலியின் வடகிழக்கு பகுதியின் காவ் பிராந்தியத்தில் உள்ள டபான்கோர்ட் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கூட்டு கண்காணிப்பு பணியின் போது எதிர்பாராத விதமாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ராணுவமும் அவர்களுக்கு பதிலடி வழங்கியுள்ளனர். இதில் ராணுவ தரப்பினரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
தீவிரவாதிகள் தரப்பில் 17 பேர் உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். 70 மோட்டர் சைக்கிள்கள் மற்றும் வாகனங்கள் அழிக்கப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து ராணுவம் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.