வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தமது கட்சி தீா்மானித்துக்கதாக மக்கள் முன்னேற்ற கூட்டணியின் செயலாளர் நாயகம் கணேஷ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமது ஆதரவின் ஊடாக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், “கடந்தகாலங்களில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியவர்கள் தங்களுடைய நலன்களையே பெற்றுக் கொண்டார்கள். மக்களுடைய நலன்கள் தொடர்பாக அவர்கள் சிந்தித்ததே கிடையாது.
இந்நிலையில், தற்போது இளம் ஜனாதிபதி வேட்பாளராகவும் சிறந்த தெரிவாகவும் உள்ள சஜித் பிரேமதாசுவுக்கு எங்களின் ஆதரவை வழங்கும் தீர்மானத்தினை நாங்கள் எடுத்திருக்கின்றோம். ஆதரவு வழங்குவதற்காக அவரிடமிருந்து நாங்கள் உத்தரவாதம் எதனையும் பெறப்போவதில்லை.
மாறாக தமிழ் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகள் சிலவற்றை அவா்களிடம் கூறி அதற்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நாங்கள் திடமாக செயற்படுவோம். குறிப்பாக பல பிரச்சினைகளை நாங்கள் அடையாளம் கண்டிருக்கின்றோம்.
மேலும் உரிமை விடயத்திலும் சில தீா்க்கமான விடயங்களை சிந்தித்திருக்கின்றோம். மிக விரைவில் சஜித் பிரேமதாசவை நேரில் சந்தித்து பேசுவதற்கும் தீர்மானித்துள்ளோம்.
இதன்போது தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களுடைய அடிப்படையான பிரச்சினைகள் குறித்து பேசுவோம்” என்று குறிப்பிட்டார்.