தமக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ள பொலிஸார், இது மூவரின் கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக அமையும் என கூறியுள்ளனர்.
கில்லாம் (Gillam) அருகே உள்ள நெல்சன் ஆற்றில் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அலுமினிய படகை அடுத்து, தேடுதலில் ஈடுபட்ட பொலிசார், தற்போது கொலை வழக்கிற்கு தேவையான முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, சிறப்பு குழுவினரை இந்த தேடுதல் பணியில் ஈடுபடுத்தவுள்ளதாகவும், நெல்சன் ஆற்றின் குறிப்பிட்ட பகுதியில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், கடந்த ஒரு வார காலமாக குறிப்பிட்ட பகுதியை பொலிஸார் கண்காணித்து வந்துள்ளனர். மூவர் கொலையில் சந்தேக நபர்களான ஷ்மேகல்ஸ்கி மற்றும் மெக்லியோட் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் பொலிசாருக்கு கிடைக்கவில்லை.
கடந்த வாரம் சந்தேக நபர்களான இரண்டு இளைஞர்களும் பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனம் ஒன்று தீயில் கருகி சேதமடைந்த நிலையில் கில்லாம் பகுதியில் மீட்கப்பட்டது.
இதனையடுத்தே பொலிசார் அந்த பகுதியில் தங்கள் தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த மாதம் கனடாவுக்கு சுற்றுலா சென்றிருந்த அவுஸ்ரேலியரான 23 வயது Lucas Fowler மற்றும் அவரது காதலியான அமெரிக்காவைச் சேர்ந்த Chynna Deese ஆகிய இருவரும் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
இவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் Leonard Dyck என்ற முதியவரின் சடலமும் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போனதாக பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்ட ஷ்மேகல்ஸ்கி மற்றும் மெக்லியோட் ஆகிய இளைஞர்கள் மீது சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.