
தமிழக சட்ட சபையில் இன்று (புதன்கிழமை) நீட் சட்டவரைபுகள் நிராகரிப்பு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் இடம்பெற்றது.
இதன்போது, நீட் சட்ட வரைபுகளை மத்திய அரசு நிராகரித்த தகவலை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மறைத்ததாகவும், தவறான தகவலை அளித்ததற்காக அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், நீட் சட்டவரைபுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவே தகவல் வந்தது எனவும், தான் கூறியது தவறு என்றால் பதவி விலகத் தயார் என்றும் கூறினார்.
அமைச்சரின் இந்த விளக்கம் திருப்தி அளிக்காததால் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்தனர்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கக்கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 2 சட்ட வரைபுகளையும் மத்திய அரசு அண்மையில் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
