
குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில், “யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு 10 வருடங்கள் நெருங்கும்போதுதான் எமது நாட்டில் பிரச்சினை ஏற்பட்டது. அதாவது, யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு மே மாதம் 19 ஆம் திகதியன்று 10 வருடங்கள் பூர்த்தியாகவிருந்த நிலையில், ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்றன.
எமது காலத்திலும் நாட்டில் குண்டுகள் வெடித்துள்ளன. விமானங்களில் வந்து கொழும்பில் குண்டுகளை வீசினார்கள். ஆனால், மக்கள் இன்றுபோல் அச்சப்படவில்லை. அத்தோடு அன்றாட செயற்பாடுகளில் எவ்வித தடங்கலும் ஏற்படவில்லை. இந்த நிலைமை இன்று முற்றாக மாற்றமடைந்துள்ளது.
அரசாங்கத்தின் ஸ்திரமின்மையினால் அச்சத்துடன்தான் மக்கள் இன்னும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு 10 வருடங்களுக்குள், மக்களை மீண்டும் அச்சமான ஒரு சூழ்நிலைக்குத் தள்ளுவதானது, என்னைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ள முடியாத குற்றமாகவே கருதப்படுகிறது.
நாம் பின்நோக்கித்தான் இன்று நகர்ந்துக் கொண்டிருக்கிறோம். தேசிய பாதுகாப்பு தான் ஒரு நாட்டுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
இந்த தேசிய பாதுகாப்பையே உறுதிப்படுத்த முடியாத ஒரு அரசாங்கம் இருக்குமானால், அதற்கு நாட்டை ஆட்சி செய்ய தகுதியில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். இன்று அந்த நிலைமையில்தான் நாடு காணப்படுகிறது” என கூறினார்.
