LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, July 21, 2019

கன்னியா : சிவபுராணம் எதிர் இராணுவம்?


BY; NILLANTHAN


கன்னியா வெந்நீரூற்றில் தமது மரபுரிமைச் சொத்தைக் காப்பாற்றுவதற்காக சுமார் இரண்டாயிரம் மக்கள் திரண்டிருக்கிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை தென்கயிலை ஆதீனமும், கன்னியா மரபுரிமை அமைப்பும் மேற்படி திரட்சியை ஒழுங்குபடுத்தியிருந்தன. ஒரு வழிபாடாக தேவாரங்களைப் பாடிக்கொண்டு கன்னியாப் பிரதேசத்திற்குச் செல்வது இத்திரட்சியின் நோக்கமாகும். முகநூலில் விடுக்கப்பட்ட அழைப்பு மற்றும் கைபேசிச் செயலிகளின் வலையமைப்பு போன்றவற்றிற்கூடாக மக்கள் திரட்டப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் அங்கே காணப்பட்டார்கள். கூட்டமைப்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்கள் முன்னணியின் தலைவரும் பிரதானிகளும் உட்பட தொகையான அரசியற் செயற்பாட்டாளர்களும் அங்கே காணப்பட்டார்கள். எனினும் கூட்டமைப்பின் திருமலை மாவட்ட பிரதானிகளை அங்கே காண முடியவில்லை. 2009ற்குப் பின் தமிழ் பகுதிகளில் நடந்து வரும் பெரும்பாலான போராட்டங்களைப் போலவே இப்போராட்டத்திலும் மக்கள் முன்சென்றார்கள். தென்கயிலை ஆதீனத்தின் குரு முதல்வர் இத்திரட்சிக்குத் தலைமை தாங்கினார்.
2009ற்குப் பின் தமிழ் அரசியற்பரப்பில் துருத்திக்கொண்டு மேலெழுந்த ஒரு சமயப் பெரியார் அவர். யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒர் ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியர். கட்டையான தோற்றம். ஆனால் சுறுசுறுப்பானவர். தமிழ் பகுதிகளில் காணப்படும் ஏனைய ஆச்சிரமங்கள், ஆதீனங்களோடு ஒப்பிடுகையில் வளம் குறைந்த ஓர் ஆதீனம் அது. சில மாதங்களுக்கு முன்பு முள்ளிவாய்க்காலில் மே பதினெட்டை எப்படி நினைவு கூர்வது என்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மேற்படி குருமுதல்வர் தனது உதவியாளரோடு திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவிற்கு மோட்டார் சைக்கிளில் வந்திருந்தார். அண்மைக் காலங்களில் தமிழ் பகுதிகளில் நடக்கும் போராட்டங்களில் அடிக்கடி காணப்படும் ஒருவராக அவர் துருத்திக்கொண்டு தெரிகிறார்.

ஏற்கெனவே ஈழத்தமிழர்கள் மத்தியில் ஸ்தாபிதமாக இருக்கும் பல ஆதீனங்கள் ஆன்மீகப் பணிகளுக்குமப்பால் அகலக்கால் வைப்பதில்லை. பொது வைபவங்களிலும் சில சமயங்களில் அரசியல் நிகழ்வுகளிலும் தோன்றி ஆசியுரை வழங்குவதோடு சரி. ஆனால் அண்மைக்காலங்களாக விதி விலக்காக யாழ்ப்பாணம் சின்மயா மிஷனைச் சேர்ந்த ஒரு துறவியும் தென்கையிலை ஆதீனக் குருமுதல்வரும் அரசியல் நிகழ்வுகளிலும் குறிப்பாகப் பொதுமக்கள் போராட்டங்களிலும் அதிகமாகக் கலந்து கொள்கிறார்கள். துணிச்சலாகவும், கூர்மையாகவும் கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.


பொதுவாகத் தமிழ் அரசியல் பரப்பில் கிறிஸ்தவ மதகுருக்களே அதிகம்காணப்படுவதுண்டு. எனினும் ஆயுதப் போராட்டத்தில் பெருமளவு இந்து மதகுருக்கள் இணைந்திருக்கிறார்கள். கிறிஸ்தவ சமய மரபில் மதகுருவே போதகராகவும் சமூகச்சிற்பியாகவும் தொழிற்படுவார். இந்து சமயத்தில் பூசகர் வேறு பிரசங்கி வேறு ஆதீனம் வேறு என்ற ஒரு வலுவேறாக்கம் உண்டு. அரிதான சில புறநடைகள் தவிர பூசகர்கள் பூசையோடு நின்று விடுவார்கள். ஆதீன முதல்வர்கள் ஆன்மீகத்தோடு நின்றுவிடுவார்கள்.

இவ்வாறானதோர் சமூக சமய அரசியல் பாரம்பரியத்தில் 2009ற்குப் பின் ஒரு தனிக் குரலாகச் சன்னமாக ஒலித்தவர் முன்னாள் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆவார். அக் காலக்கடத்தில் அவருக்கு நிகராக வேறெந்த மதத்தலைவரும் குரல்கொடுத்ததில்லை. இப்போதிருக்கும் திருமலை ஆயரும் செயல்களில் தீவிரமானவர். முன்னாள் மன்னார் ஆயரைப் போல வெளிப்படையாக அரசியலைக் கதையாதவர். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணிச்சலாக வழிகாட்டும் ஒருவர். திருமலை கத்தோலிக்க ஆதீனத்திற்கு அப்படியொரு ஆயர் கிடைத்திருக்கும் ஓர் அரசியற் சூழலில் இந்து மதப்பரப்பில் யாழ்ப்பாணம் சின்மயா மிஷனைச் சேர்ந்த ஒரு துறவியும் திருமலை தென்கயிலை ஆதீன முதல்வரும் துணிச்சலாக துருத்திக்கொண்டு மேலெழுகிறார்கள்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதீனத்தின் குரு முதல்வர் அவமதிக்கப்பட்டிருக்கிறார். தேவாரம் பாடிக்கொண்டு சென்ற மக்களை பொலிசும் படைத்தரப்பும் ஆயுதங்களோடு மறித்திருக்கின்றன. தேவாரங்களை மட்டும் ஆயுதங்களாகக் கொண்டு தமது வழிபாட்டு உரிமையைக் கேட்டு அங்கு திரண்ட மக்களை ஆயுதம் தாங்கிய நூற்றுக்கணக்கான பொலிசாரும், படை வீரர்களும் எதிர்கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் உதிரியாகக் கன் னியாவுக்குச் செல்வதை யாரும் தடுப்பதில்லை. ஆனால் ஒரு திரளாகத் தமது மரபுரிமையைக் கேட்டுச் செல்லும் போதே தடுக்கப்பட்டிருக்கிறார்கள். 2009ற்குப் பின் திருமலையில் இப்படியாக மக்கள் திரண்டது ஓர் அசாதாரணம். அந்த மக்களை அடக்க பெருந்தொகை இராணுவமும் பொலிசும் திரண்டதும் ஓர் அசாதாரணம். குறிப்பாகப் படை வீரர்கள் முகங்களை கறுப்புத்துணியால் மூடிக்கொண்டு காணப்பட்டார்கள்.


தேவாராத்தோடு வந்த தமிழ் மக்களை அரசாங்கம் தனது அனைத்து உபகரணங்களோடும் எதிர்கொண்டது. பொலிசும் படைத்தரப்பும் மட்டுமல்ல நீதிமன்றமும் அந்த மக்களுக்கு தடையுத்தரவு பிறப்பித்தது. அந்த மக்கள் தமது மரபுரிமைச் சொத்தைக் வழிபடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. தடையுத்தரவைக் காட்டி மக்கள் திரட்சியைத் தடுத்த பொலிசார் முடிவில் ஆதீன முதல்வரையும் கன்னியாப் பிள்ளையார் கோவில் அமைந்திருக்கும் காணிக்குச் சொந்தக்காரரான மூதாட்டியையும் உள்ளே செல்ல அனுமதித்திருக்கிறார்கள். உள்ளே சென்ற இருவர் மீதும் அரசாங்கத்தின் மற்றொரு உபகரணமான காடையர்கள் சூடான எச்சில் தேநீரை முகத்தில் ஊற்றி அவமதித்திருக்கிறார்கள்.
தென்கயிலை ஆதீன முதல்வரின் மீது வீசப்பட்ட எச்சில் தேநீர் முழுத் தமிழ் மக்கள் மீதும் வீசப்பட்ட ஒன்றுதான். தமது மரபுரிமைச் சொத்துக்களைப் பாதுகாக்கச் சென்ற ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் மீது வீசப்பட்ட எச்சில் தேநீர்தான். தமது வழிபாட்டு உரிமையைக் கேட்டுச்சென்ற ஒரு மக்கள் கூட்டத்தின்மீது வீசப்பட்ட எச்சில் தேநீர்தான். தேவாரங்களோடு வந்த ஒரு மக்களை ஓர் அரச எந்திரம் இப்படியாக எதிர்கொண்டிருக்கிறது. ஆதீன முதல்வர் ஒரு அரசியற் செயற்பாட்டாளரல்ல. முதலாவதாக அவர் ஒரு சமயப் பெரியார். ஓர் அரசியல் செயற்பாட்டாளரின் நோக்கு நிலையிலிருந்து சிந்தித்திருந்தால் அவர்களை நம்பி அங்கே திரண்ட கிட்டத்தட்ட 2000 பொதுமக்களுக்கு மறுக்கப்பட்ட அனுமதி தங்களுக்கும் வேண்டாம் என்று மறுத்திருந்திருக்க வேண்டும். மாறாக இரண்டு பேர் மட்டும் அந்த அனுமதியைப் பெற்றுக்கொண்டு சென்று அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
எனினும் அந்த அவமதிப்பு அப்போராட்டத்தை உணர்ச்சிகரமாகத் திருப்பியிருக்கிறது. நிலமை மிகவும் கொதிப்பாகக் காணப்பட்டது. ஆனால் அவ்வுணர்ச்சிகரமான சூழலை வெற்றிகரமாகக் கையாண்டு அதன் அடுத்த கட்டத்திற்குத் தலைமை தாங்க அங்கே யாரும் இருக்கவில்லை. கடந்த பத்தாண்டுகளாக தமிழ்ப் பகுதிகளில் நடந்து வரும் பெரும்பாலான மக்கள் மையப் போராட்டங்களில் காணப்படும் அதே பலவீனம் இங்கேயும் வெளிப்பட்டிருக்கிறது. போராட்டத்தின் முடிவில் தென்கயிலை ஆதீனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அது மிகச் சரியாகவே கூறப்பட்டிருக்கிறது.
ஆதீன முதல்வர் அவமதிக்கப்பட்டதற்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யுமாறு அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அடிப்படை உரிமைகளில் ஒன்றாகிய வழிபாட்டுரிமை தடுக்கப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணையக்குழுவில் சில முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவற்றோடு கன்னியாவிலிருப்பது தமிழ் மரபுரிமைச் சொத்தே என்பதனை சான்றாதாரங்களோடு நிரூபித்துச் சட்டப்படி அதற்கொரு தீர்வைப் பெறுவதற்கும் சில தரப்புக்கள் முயல்வதாகத் தெரிகிறது.


ஆனால் அது ஒரு சட்ட விவகாரம் மட்டுமல்ல. அடிப்படை உரிமைகள் விவகாரம் மட்டுமல்ல. அதைவிட ஆழமாக அது ஓர் அரசியல் விவகாரம். அதை அரசியற் தளத்திலேயே அணுக வேண்டும். அரசியல்வாதிகளும் அரசியல் இயக்கங்களும், அரசியற் செயற்பாட்டாளர்களும் அதற்குத் தலைமை தாங்க வேண்டும். சமயப் பெரியார்களும், சமூக அமைப்புக்களும் அவர்கள் பின் திரள வேண்டும்.



நீராவியடிப் பொங்கல்
இது போன்ற போராட்டங்களை சமய அமைப்புகள் எதுவரை முன்னெடுக்கலாம்?
சில மாதங்களுக்கு முன் டாண் ரிவியின் சாதனை விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது என்னருகில் மூத்த நிர்வாக சேவை அதிகாரி ஒருவர் இருந்தார். அவர் ஒரு கிறிஸ்தவர். இம்முறை அவ்விருது ஆறு திருமுருகனுக்கு வழங்கப்பட்டது. என்னருகில் இருந்த அதிகாரி சொன்னார் “நாவற்குழியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட குடியேற்றம் அதையொட்டிக் கட்டப்பட்டுவரும் விகாரை என்பவற்றின் பின்னணியில் ஆறு திருமுருகனின் திருவாசக அரண்மனைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு” என்று அதாவது, நாவற்குழியில் சிங்கள பௌத்த மயமாதலுக்கு எதிரான மதப்பல்வகைமையை திருவாசக அரண்மணை கட்டியெழுப்பபுகிறது என்ற பொருளில்.
ஆனால் சிங்கள பௌத்த மயமாதலுக்கு எதிராக சைவசமயத்தை முன்னிறுத்துவது ஒர் இறுதித் தீர்வல்ல. பௌத்த மதத்தின் பலவர்ணக் கொடிகளுக்கு மாற்றாக நந்திக்கொடியை உயர்த்திப் பிடிப்பதும் ஒர் இறுதித் தீர்வல்ல. இது முதலாவதாக ஒரு மதப்பிரச்சினையல்ல. இது முதலாவதாகவும் இறுதியானதாகவும் ஓர் அரசியற் பிரச்சினை. இங்கு மதம் ஆக்கிரமிப்பின் ஒரு கருவி. தேசியம் எனப்படுவது ஒரு நவீன சிந்தனை. அது பல்வகைமைகளின் திரட்சி. தமிழ்த்தேசியம் மதப் பல்வகைமையின் மீதே கட்டியெழுப்பப்படவேண்டும். மதம் ஆக்கிரமிப்பின் கருவியாக வரும் போது அதை அரசியல்த்தளத்திலேயே எதிர் கொள்ள வேண்டும். அதன் அரசியல் அடர்த்தியை மத விவகாரமாகக் குறுக்கவும் கூடாது குறைக்கவும் கூடாது. புத்தர் சிலைகளை அவர்கள் எல்லைக் கற்களாக முன்ந்கர்த்தும் போது தமிழர்கள் அதற்கு எதிராக சிவலிங்கத்தை முன் நகர்த்தக் கூடாது. ஏனெனில் சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் தமிழ்த் தேசியத்திற்கு ஆசிரியர் இல்லை.
ஒரு மதத்தின் சின்னங்களுக்கு எதிராக அல்லது மாற்றாக இன்னொரு மதத்தின் சின்னங்களை முன்னிறுத்தும் போது அது தேசியவாத அரசியலுக்கு எதிராகத் திரும்பாமற் பார்த்துக் கொள்ள வேண்டும். கொடிகளும் சின்னங்களும் உணர்ச்சிகரமாகச் சனங்களைத் திரட்டும். ஆனால் அத்திரளாக்கம் சிலசமயம் தேசியத்தை உடைக்கும். சில சமயம் அடிப்படைவாதிகளின் வழிகளை இலகுவாக்கிக் கொடுத்துவிடும். ஏற்கெனவே தமிழில் இந்து அடிப்படைவாதிகள் மெல்ல மேலெழத் தொடங்கி பார்க்கிறார்கள். 
எனவே கன்னியா விவகாரத்தை ஓர் அரசியல் விவகாரமாக முன்னெடுக்கவல்ல தரப்புக்கள் ஒன்று திரள வேண்டும். அதை கூட்டமைப்பிற்கு எதிரான ஒரு களமாகப் பயன்படுத்த விளையும் கட்சிகளும் சரி ஏனைய செயற்பாட்டாளர்களும் சரி அதை ஒரு கூட்டுப் பொறிமுறைக்கூடாக முன்னெடுக்க வேண்டும். அதற்கொரு ஒட்டுமொத்த அரசியற் தரிசனமும் வழிவரைபடமும் கொண்ட ஒரு மக்கள் இயக்கம் வேண்டும்.
இப்பொழுது கன்னியாவைப் பற்றியும் செம்மலை நீராவியடியைப் பற்றியும் கட்டுரை எழுதும் நாங்கள் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றியும் கேப்பாபிலவைப் பற்றியும் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தோம். இடைக்கிடை அரசியற் கைதிகளுக்காகவும் கட்டுரை எழுதினோம். இப்பொழுதும் ஓர் அரசியற் கைதி சாகும்வரை உண்ணாவிரதமிருக்கிறார். இதில் எந்தவொரு விடயத்திலும் முழுத் தீர்வு கிடைக்கவில்லை. முடிவுறாத முன்னைய போராட்டத்தை புதிதாக எழும் ஒரு புதிய போராட்டம் பின்தள்ளிவிடுகிறது. நாளை இந்தப் போராட்டமும் ஒரு பழைய போராட்டமாகிவிடும். வேறொரு புதிய போராட்டம் அல்லது வேறொரு புதிய விவகாரம் முன்னுக்கு வந்துவிடும். இப்போராட்டங்கள் யாவும் உதிரியானவையல்ல. 2009ற்குப் பின்னரான ஓர் ஒட்டுமொத்த யுத்த வியூகத்தின் பகுதிகளே இவை. ஒரு போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்காமலேயே இன்னொரு போராட்டத்திற்குத் தாவுவது என்பது தற்செயலானது அல்ல. தமிழ் மக்களின் கவனத்தை திட்டமிட்டே சிதறடிக்கிறார்கள். எனவே உதிரி உதிரியாகப் போராடாமல் ஓர் ஒட்டுமொத்த யுத்த வியூகத்தை எதிர்கொள்ள முதலில் ஒட்டுமொத்த தற்காப்புக் கவசத்தையும் அதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த கூட்டு எதிர்ப் பொறிமுறையையும் தமிழ் மக்கள் கண்டுபிடிக்க

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7