பிரெக்ஸிற்றின் பின்னர் பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் 2 ஆம் நாளான இன்று டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயுடன் இணைந்து வர்த்தகத் தலைவர்களைச் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
இரு நாட்டுத் தலைவர்களின் இந்தச் சந்திப்பின்போது ஹூவாவியுடனான சர்ச்சைக்குரிய வர்த்தகம் தொடர்பான விடயங்களும் பேசப்பட்டன.
வெஸ்ற்மின்ஸ்ரர் பகுதியிலுள்ள செயின்ற் ஜேம்ஸ் அரண்மனையில் காலை உணவு நேரத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பிரித்தானியாவின் வர்த்தகத் தலைவர்கள், அமெரிக்காவின் வர்த்தகத் தலைவர்கள், மற்றும் சிரேஸ்ட அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் சந்திப்பின்போது காலநிலைமாற்றம் மற்றும் இரானுடனான பிரித்தானியாவின் நிலைப்பாடுகள் குறித்து பிரதமர் தெரேசா மே அமெரிக்க ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கவுள்ளார்.
இதேவேளை டொனால்ட் ட்ரம்ப்பின் பிரித்தானிய விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனில் நடத்தப்படும் ஒருபேரணியில் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் கலந்துகொள்ளவுள்ளதால் எதிர்ப்புக்கள் மேலும் வலுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.





