பின்னர், நாட்டில் இனங்களுக்கிடையில் மோதலை உருவாக்கி ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சிகளில் சிலர் இறங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான இன மோதல்களின் பின்னணியில் குழு ஒன்று உள்ளமையை விசாரணைகள் ஊடாக அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமுர்த்தி பயனாளிகளுக்கான உரித்துப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடா்பாக நாங்கள் முன்னதாகவே அறிந்திருக்கவில்லை. அதற்கு சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது.
இந்த தீவிரவாதத்தை ஒழிக்க சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைய வேண்டும். நாட்டில் தற்போது சூழல் நன்றாக இருக்கின்றது.
வாரியபொல உள்ளிட்ட பல பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இந்த தாக்குதல் சம்பவங்கள் திட்டமிட்ட சதி என்றே நான் கூறுகின்றேன்.
இனவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு ஆட்சியைப் பிடிக்க சிலர் நினைக்கிறார்கள். அதேபோல் நீர்கொழும்பு பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. அதற்கு காரணம் வதந்தி. இவ்வாறு பல தாக்குதல் திட்டங்கள் தீட்டப்பட்ட நிலையில் அவற்றை நாங்கள் முறியடித்திருக்கின்றோம்.
தீவிரவாதிகளுக்கு மனிதாபிமானம் என்பதே கிடையாது. ஆகவே இவ்வாறான தாக்குதல்களுக்கு இனிமேலும் இடமளிக்கக்கூடாது. தீவிரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டின் பாதுகாப்பு வீழ்ச்சி கண்டுள்ளதாக சிலர் கூறினார்கள். ஆனால் நாங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பாடசாலைகளை திறந்திருக்கின்றோம். நாட்டின் பாதுகாப்புக்காக இராணுவத்தினரும் பொலிஸாரும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றாா்கள்.
அவா்களுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டும். தீவிரவாதிகளுக்கும், தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களுக்கும் மன்னிப்பே கிடையாது. தீவிரவாதிகளின் பெயரால் இனவாதம் தலைதூக்குவதைத் தடுக்கவேண்டும். இனவாதம் மீண்டும் தலைதூக்கினால் நாடும் அழிந்துவிடும். நாமும் அழிந்துவிடுவோம். இந்த தாக்குதல்களினால் நாடு பாரிய பின்னடைவுகளைச் சந்தித்திருக்கின்றது” என்று அவர் குறிப்பிட்டார்.






