நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முஸ்லிம் சமூகம் ஒத்துழைக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் எம்.என்.எம். அஸீம் கோரியுள்ளார்.ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்ததுவதற்காக ஆயுதப்படையினரும், பொலிஸாரும் அயராது உழைக்கும் இந்த தருணத்தில் அவர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பை வழங்குமாறு அவர் முஸ்லிம் சமூகத்தினரிடம் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “கடந்த 30 வருடகால யுத்தம் நிறைவுபெற்றதிலிருந்து 10 வருடங்கள் நாட்டில் அமைதி நிலவியது. இவ்வாறான சூழ்நிலையிலேயே அமைதியை சீர்குலைக்கும் வகையில் மிலேச்சத்தனமாக குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அதற்கு அனைவரும் பொறுப்பு கூற வேண்டியவர்களாகின்றோம். இதிலிருந்து மீண்டெழுந்து நாட்டை எழுச்சிப்பாதையில் இட்டுச் செல்வதற்கான ஒத்தழைப்பை வழங்க வேண்டியது அனைவரதும் கடமையாகும்.
அவசரகால சட்டம் அமுலில் உள்ள நிலையில், சந்தேகத்தின் பேரில் எவராயினும் கைதுசெய்யப்படும் பட்சத்தில் ஊடகங்களில் பெருமளவில் கைதானவர் குறித்து பேசப்படுகின்றது. பின்னர் அவர் நிரபராதியாக விடுவிக்கப்படும் பட்சத்தில் அவர் குறித்து கவனஞ்செலுத்தப்படுவதில்லை.
எனவே, இந்த விடயம் குறித்து ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படவேண்டியது அவசியமானதாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.





