
குழந்தைக்கு சஹ்ரான் என பெயர் சூட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் விடயத்தை வைத்தியசாலை நிர்வாகம் மறுத்துள்ளது.
அத்துடன், வைத்தியசாலையின் பெயருக்கு அவதூறு ஏற்படும் வகையிலான இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் இவ்வாறு பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிட்டால், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினை நாடி தீர்வை பெறவுள்ளதாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பிறந்த குழந்தைக்கு சஹ்ரான் பெயர் சூட்டப்பட்டதாக சமூக வலைத்தளம் மற்றும் சில இணைய ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு இன்று (சனிக்கிழமை) பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர் “தற்போதைய கால கட்டத்தில் சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு இன முரண்பாடுகளை தோற்றுவிக்க முனைகின்றன. எனவே அனைத்து இன மக்களும் அவதானமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்தியுள்ளது.
இச்சம்பவம் போலியாக சோடிக்கப்பட்டு எமது வைத்தியசாலைக்கு அவதூறு பரப்பப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான எந்த நிகழ்வும் இடம்பெறவில்லையென தெரிவித்துக்கொள்கின்றேன்.
சில இனவாதிகள் இனங்களுக்கிடையே முரண்பாட்டை தோற்றுவிக்க தூபமிடும் வகையில் இனவாத சமூக வலைத்தளங்களில் வைத்தியசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சிறந்த சேவை மற்றும் மிகச்சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பு என்பவற்றுக்காக இலங்கையில் முன்மாதிரியான வைத்தியசாலையாக திகழ்வதுடன் இதற்காக பல விருதுகளையும் பெற்றுவருகின்றது.
இதனிடையே, திருப்தியான வைத்திய சேவையை வழங்கும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் திட்டமிட்ட செயலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதுடன் இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதேவேளை, குறித்த விடயத்தைக் கண்டித்து நாளை சில தாதிய சங்கங்கள் போராட்டங்களை மேற்கொள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
