
இராணுவப் பயிற்சித்திட்டத் தலைமைத்துவத்தில் நீடிப்புக்கான அங்கீகாரத்தினை கனேடிய மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நவபம்பர் மாதம் வரையில் இராணுவ நடவடிக்கையினை நீடிப்பதாக கனடா தெரிவித்துள்ளது.
ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈராக்கில் நேட்டோ நடவடிக்கைகளின் கீழ் அந்த நாட்டு இராணுவத்திற்கு பயிற்சியளிப்பதற்காக தங்கியுள்ள 250 கனேடிய இராணுவத்தினர் உட்பட, அந்தப் பிராந்தியத்தில் ஐ.எஸ் மீதான நடவடிக்கைகளுக்காக 850 கனேடிய படைகள் நிலைகொண்டுள்ளனர்.
குறித்த இந்த பயிற்சி நடவடிக்கைக்கு கடந்த ஜூலை மாதத்திலிருந்து தலைமை தாங்கிவரும் கனடா, இந்த மாத இறுதியுடன் தனது தலைமைப் பொறுப்பினை பிறிதொரு நாட்டுக்கு வழங்குவதாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அது 2020ஆம் ஆண்டு நவம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து நேட்டோ உறுப்பு நாடுகள் பிரசெல்சில் கூடி ஆராய்ந்துள்ள நிலையில், அங்கு சென்றுள்ள கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஏனைய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் கூடி விவாதித்த பின்னணியில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
