
மாபெரும் யோகாசன முகாமை இந்தியத் தூதரகம் நடத்தியது.
வரும் ஜூன் 21ஆம் திகதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், சவுதியில் யோகா முகாம் நடத்தப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் அரபு யோகா பவுண்டேஷன் சார்பில் ஜெத்தா நகரில் மாபெரும் யோகாசன முகாம் நடைபெற்றது. அங்குள்ள சர்வதேச பள்ளியில் நடைபெற்ற குறித்த யோகா முகாமில் சவுதி அரேபியாவிற்கான இந்திய தூதுவர் அசிப் சயது மற்றும் துணைத் தூதுவர் நூர் ரஹ்மான் ஷேக் ஆகியோர் பங்கேற்றனர்.
உலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகாசெய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக ஆண்டில் ஒருநாளை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா.சபையில் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.
அதன்படி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் ஜூன் 21ஆம் திகதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, இம்முறை இந்தியாவில், ராஞ்சி நகரில் வரும் 21ஆம் திகதி சர்வதேச யோகா தினத்தை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு யோகாசனம் செய்யவுள்ளார்.
