LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, May 24, 2019

அமைச்சர் ரிசாத்மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையும் தமிழ்மக்களின் எண்ணங்களும்.


அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரரணை பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டிருக்கிறது. இது விவாதத்துக்கு வரும் காலத்தையும் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும்காலத்தையும் ஓரளவு தள்ளிப்போட முடிந்தாலும் இரண்டையும் இல்லாமற் செய்துவிட முடியாது என்பதுதான் நிதர்சனம்.

பிரதமர் ரணிலின் செல்லப்பிள்ளையாக அமைச்சர் ரிசாத் இருந்தபோதிலும், ரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிட்டுள்ள பத்துக் குற்றச்சாட்டுகளையும் எழுந்தமானத்தில் நிராகரித்துவிட முடியாதென்பதால் அவைபற்றிய விசாரணைக் குழுவை ரணில் நியமித்திருக்கிறார். இக்குழு மூன்றுவாரத்தில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே விவாதம் வாக்கெடுப்பு எல்லாம் மூன்றுவாரங்களின் பின்னர்தாம் என்பது நடைமுறை உண்மை.

இந்த இடைப்பட்ட காலத்தில் தன்னை நியாயப்படுத்தித் தனக்கான ஆதரவாளர்களைத் திரட்டிக்கொள்ள ரிசாத்துக்கு ரணில் போதிய அவகாசத்தை வழங்கியிருக்கிறார் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. ரிசாத்தும தீவிரமான தொடர்புகளை ஏற்படுத்தித் தனது நியாயங்களை தனக்கு இசையக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தி வருகிறார்.

ர்pசாத்தின் ஆதரவாளரான துணைஅமைச்சர் அப்துல்லா மகரூப் ரிசாத்தின்மேல் குறிப்பிடப்பட்டிருக்கும் குற்றங்கள் உறுதிப்படுத்தப்படுமானால் அமைச்சர் ரிசாத் பதவி விலகுவார் என அறிவித்துள்ளதோடு  அவ்வாறு நேரும் பட்சத்தில் அவருடன் சேர்ந்து தானுட்பட அவரது ஆதரவாளர்கள் பலர் வெளியேறுவார்கள் எனவும் அழுத்தமாக அறிவித்திருக்கிறார்.

அமைச்சர் அப்துல்லா ரிசாத்துக்காகப் பதவி துறப்பாரா என்ற கேள்வி ஒரு புறமிருக்க, அவ்வறிவிப்பானது விசுவாசத்தின் வெளிப்பாடா அல்லது பயமுறுத்தும் தன்மையுடைத்தா என்ற கேள்வியும் எழாமலில்லை. இவ்வார்த்தைகள் ரணிலை நோக்கியதாக இருக்கலாம் எனக் கொள்ளப்படுவதிலும் நியாயமுண்டு.

எவ்வாறெனினும் ரிசாத் தைரியமாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதுபோல் தெரிகிறது. பிரதமரோ, ஜனாதிபதியோ உத்தரவிட்டால் அமைச்சுப் பதவியைக் கைவிடக் காத்திருக்கிறேன் என்றும் பதவியை இழந்தபின் ஆளுங்கட்சியின் பின்வரிசையில் தானும் தமக்காக அமைச்சுப் பதவிகளைத் துறந்த தனது ஆதரவாளர்களும் அமர்ந்து கொள்வோம் என்றும் அனுதாப வாக்குமூலம்வேறு கொடுத்திருக்கிறார். எதிர்க்கட்சி வரிசையிற்போய் அமர்ந்தால் பாராளுமன்ற உறுப்புரிமைகளுக்கும் கேடு நேர்ந்துவிடும் என அவர் அஞ்சுவது தெரிகிறது.

நிற்க,  இவையெல்லாம் ஆளுங்கட்சியுடையதும் அவர்களுடன் சதாகாலமும் ஒட்டிக்கொண்டு அரசியல் செய்பவர்களுடையதுமான பிரச்சினை. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எவ்வித பங்குடைமையும் கிடையாது. ஆனால் ரிசாத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனுடன் தொடர்புகொண்டு தனக்கு ஆதரவுகேட்டுப் பேசியவேளை சிறுபான்மைக் கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிரான பெரும்பான்மையினரின் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கமாட்டோம் என்ற கருத்துப்படச் சம்பந்தன் பதிலிறுத்ததைத் தமிழ்மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

ரிசாத் ஒரு நல்லமனிதர் என்றோ நல்ல அரசியல்வாதி என்றோ தன்னினத்தைத் தவிர மற்றவர்கள்மேல் கரிசனை உள்ளவரென்றோ எந்தத் தமிழ்மகனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஹக்கீமைத் தமிழர்கள் நம்பினாலும் ரிசாத்தைத் துளியேனும் நம்பப் போவதில்லை. இந்த நிலையில் தனியே தமிழ்மக்களின் வாக்குகளாற் தெரிவான த.தே.கூட்டமைப்பின் தலைவர் தன்னிச்சையாக எப்படி இத்தகைய அபிப்பிராயம் கூறமுடியும் என்பதே கேள்வி;.

அதுவும் ரிசாத் சிறுபான்மையினக் கட்சியின் தலைவர் என்பதால் அவருக்கு இடையூறு நேர்வதை அனுமதிக்க முடியாது என்ற தோரணையில் சம்பந்தன் கருத்துக் கூறியுள்ளார். முஸ்லிம்களுக்குச் சிக்கல் வருகின்ற நேரங்களைத்தவிர முஸ்லிம் தலைவர்கள் எவரேனும் தங்களைச் சிறுபான்மையினத் தலைவராக வெளிப்படுத்திய சந்தர்ப்பங்களைச் சம்பந்தர் தமிழ்மக்களுக்கு அறியத்தர முடியுமா என்று கேட்டால் பதில் இருக்கப்போவதில்லை.

தமிழர்கள் துன்பப்படுகின்ற வேளைகளிலெல்லாம் இந்தத் தலைவர்கள் சிங்கள அரசின் தொங்குதசைகளாகச் செயல்பட்டவர்கள் என்பதைத் தமிழர்களால் மறந்துவிட முடியாது. அரசுடன் தமிழர்கள் அதிகாரம் தொடர்பாகப் பேசிய வேளைகளிலெல்லாம்  தாங்களும் சிறுபான்மையினர் என்பதை வசதியாக மறந்து அரசபிரதிநிதிகளில் ஒருவர் போலாகித் தமிழர்களுக்கு என்னகுறை,   என்ற நிலைப்பாட்டுடன் நடந்து கொண்டவர்கள்தாம் இவர்கள். முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் அல்லற்பட்டபோது தங்கள் அமைச்சுப் பதவிகளைக் காப்பாற்றிக் கொண்டு வாய்மூடிக் கிடந்தவர்களல்லவா இவர்கள். ஏன்..ஜெனீவாவரை சென்று சிங்கள அரசுக்குகுச் சார்பாக நின்று தமிழர்களுக்குக் குறைகளெவையுங் கிடையா எனக் கூறியவர்கள்தாமே இவர்கள்.

இந்தநிலையில் முஸ்லிம் தலைவர்களைத் தங்களில் ஒருவர் எனத் தமிழ்மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? அவர்களும் சிறுபான்மை இனத்தவர் என்று எப்படி அனுதாபங் கொள்ளமுடியும்? இவற்றையெல்லாம் சம்பந்தன் இறுதி முடிவெடுக்க முன்னர் கருத்திற் கொள்ளவேண்டும்.  ரிசாத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களின் தீர்க்கமான கருத்தைக் கனம்பண்ண வேண்டும். மன்னர் மாவட்டத் தமிழரசுக்கிளையினரின் முடிவை உதாசீனம் செய்துவிட முடியாது. ஏனெனில் அனைத் துத் தமிழ்மக்களின் விருப்பமும் மன்னார் மாவட்டக்கிளையின் முடிவைப்போல் ரிசாத்துக்குத் த.தே.கூட்டமைப்பு முட்டுக் கொடுக்கக் கூடாது என்பதுதான்.

சம்பந்தன் தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகள் வெற்றிபெற்றதில்லை என்பதற்கு விக்கினேஸ்வரனின் குழப்படித்தனங்களே பிரதான சாட்சி. அதன் பலனை இன்றும் வடபகுதிமக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். கிழக்கில் தண்டாயுதபாணியும் துரைரத்தினசிங்கமும் பெறமதியற்ற மந்திரிப் பதவிக்காககச் சம்பந்தனைக் கேட்காமலேயே நசீரின் காலடியில் தமிழ்மக்களின் வாக்குகளை வைத்துப் பணிந்ததைத் தட்டிக்கேட்கத் தைரியமற்றுப்போன சம்பந்தனின் நடத்தையின் விளைவாகத்தான் கிழக்குத் தமிழர்கள் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள். இவற்றைச் சம்பந்தன் உணரவேண்டும்.

ரணிலின் அரசைத் த.தே.கூட்டமைப்புக் காப்பாற்றியமை தேசியப் பிரச்சினை. அதற்கும் ரிசாத்தின் பிரச்சினைக்கும் முடிச்சுபோடக் கூடாது. ரணிலின் பிரச்சினையில் அரசமைப்புச் சட்டமீறலைத் தடுக்கவேண்டிய தேவை நியாயமானதாக இருந்தது. அதுவுமல்லாமல் அம்மீறலினூடாக ஆபத்தான பேர்வழி அதிகாரம் பெறுவதையும் தமிழ்மக்கள் விரும்பவில்லை. ஆனால் ரிசாத்தின் விடயம் அப்படியானதன்று.

எனவே சம்பந்தன் தனிப்பட்டசிந்தனை என்று கருதியோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுதியான முடிவு என்ற போர்வையில் மறைந்தோ ரிசாத்துக்குத் துணைநிற்கும் ஒரு முடிவை நடைமுறைப் படுத்துவாரானால் சம்பந்தனும் அவருக்குத் துணைநின்றோரும் தமிழ்மக்களால் தூக்கியெறியப் படுவார்கள் என்பது உறுதி.

கந்தவனம் கோணேஸ்வரன்
23.05.2019




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7