
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் என மூவர் இணைந்ததுடன் அவர்களுடன், 50 நகராட்சி உறுப்பினர்களும் இவ்வாறு பா.ஜ.க.வுடன் இணைந்தனர்.
இந்த உறுப்பினர்கள் இணைப்பு நிகழ்வு டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தலைமை செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.
இந்த உறுப்பினர்கள் இணைப்பு நிகழ்வில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகுல் ராய், சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட அவரது மகன் சுப்ராங்ஷு ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கைலாஷ் விஜய்வார்கியா, “மேற்கு வங்காளத்துக்கு நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்ததுபோல் பா.ஜ.க.வில் இணையும் விழாக்களும் 7 கட்டங்களாக நடக்கப் போகின்றன. இந்த நிகழ்வு முதற்கட்டம் தான்” என குறிப்பிட்டார்.
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. அங்கு எதிர்பாராத வகையில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
