ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவின் பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட நாசிவந்தீவு சிவ வித்தியாலய மாணவர்களினால் போதையை ஒழிப்போம் என்ற தொனிப் பொருளில் துண்டுப்பிரசுர வினியோகம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் தெ.ஜெயப்பிரதீபன் தலைமையில் நடைபெற்ற போதையை ஒழிப்போம் என்ற தொனிப் பொருளில் துண்டுப்பிரசுர வினியோகம் மற்றும் சுவரொட்டிகள் நாசிவந்தீவு கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் பொது இடங்களுக்கு சென்று மாணவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
போதை ஒழிப்பு குழு பொறுப்பாளர்களான ப.பாலகிருஷ்ணன், உ.ரசிக்குமார் ஆகியோரின் வழிகாட்டலில் பொதுமக்கள் மத்தியில் போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் தொடர்பான விழிப்புணர்வும், துண்டுபிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டு வருகின்றது.
அத்தோடு போதை ஒழிப்பு தொடர்பாக சுவரொட்டிகள் ஒட்டும் நடவடிக்கை, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு கருத்தரங்கு உட்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் போதைப் பாவனைகள் அதிகரித்து வருவதுடன், போதைப் பொருள் கடத்தலும் அதிகரித்து வருகின்றது. மேலும் போதைப் பாவனைகள் அதிகமாக மாணவர்கள் மத்தியில் வந்துள்ளமையால் அதனை பெற்றோர்கள் மூலம் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பாடசாலை மாணவர்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றோம் என வித்தியாலய அதிபர் தெ.ஜெயப்பிரதீபன் தெரிவித்தார்.