லிபியாவில் அரச எதிர்ப்பு படைகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தலைநகர் திரிபோலியில் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்தாக்குதலில், இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜெனரல் காலிஃபா ஹஃப்தரின் அரச எதிர்ப்பு படைகள், தலைநகர் திரிபோலியை கைப்பற்றும் முனைப்பில் கடந்த சில நாட்களாக போரிட்டு வருகின்றன.
இந்நிலையில், அரச படைகள் எதிர்த்தாக்குதலை நடத்த, உள்நாட்டு போர் உக்கிரமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சண்டையில் தமது தரப்பில் இதுவரையில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹஃப்தரின் தரப்பு அறிவித்துள்ளது.
இதேவேளை, அங்கிருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் முனைப்பில், இரண்டு மணித்தியால யுத்த நிறுத்தத்தை ஐ.நா. கோரியிருந்தது.
எனினும், தொடர்ச்சியாக தாக்குதல் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.





