கிழக்கு டில்லி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் போட்டியிடுகிறார்.
ஆம் ஆத்மி சார்பில் அதிஷி போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் அர்விந்தர் சிங் லவ்லி போட்டியிடுகிறார். இதனால், அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இதில், பா.ஜ.க. வேட்பாளர் கௌதம் கம்பீர் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாகவும், அதை தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை என்றும் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி டில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து, கிழக்கு டில்லி ஜங்புரா பகுதியில் அனுமதியில்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியதாக கம்பீர் மீது வழக்குப்பதிவு செய்ய அத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி, கௌதம் கம்பீர் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி வருவதால், அவர் பிரசாரம் மேற்கொள்வதற்கு 3 நாட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,
“கௌதம் கம்பீர் கடந்த மூன்று நாட்களில் இரண்டு முறை தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அவர் தேர்தல் ஆணையத்தை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி வருகிறார். அதனால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவருடைய தேர்தல் பிரசாரத்துக்கு 72 மணி நேரம் தடை விதிக்க வேண்டும்” என்றார்.