
“ஞானம் மாந்தரின் நடுவே முடிவில்லாத அடித்தளத்தை அமைத்துள்ளது. அவர்களது மரபு வழியினரிடையே நீங்காது நிலைத்திருக்கும். ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் நிறைவு. அது தன் கனிகளால் மனிதருக்குக் களிப்பூட்டுகின்றது.
அது அவர்களின் இல்லங்களை விரும்பத்தக்க நலன்களால் நிரப்பிவிடும்| தன் விளைச்சலால் அவர்களது களஞ்சியங்களை நிறைத்திடும்.
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் மணிமுடி! அது அமைதியைப் பொழிந்து உடல் நலனைக் கொழிக்கச் செய்கிறது. ஆண்டவரே அதனைக் கண்டு கணக்கிட்டார்!
அறிவாற்றலையும், நுண்ணறிவையும் மனிதருக்கு மழையெனப் பொழிந்திட்டார்! அதை உறுதியாய்ப் பற்றிக் கொண்டோரை மாட்சிமையால் உயர்த்திட்டார்.”
ஞானம் நிறந்த உள்ளம் கடவுளின் தகமையால் நிறைந்திருக்கும். நீதிமானாக வாழும் அந்த மக்களுக்கு அருளும், நலனும், செல்வமும் என்றும் குறைவில்லாமல் இருந்து கொண்டேயிருக்கும். காலத்தையும், ஞாலத்தையும் பற்றிய அறிவு அவர்களிடத்தில் நிறைந்திருப்பதால் காலத்தே பயிர் செய்யவும், அதன் அறுவடையை நிறைவாக அனுபவிக்கவும் அவர்களுக்கு வாய்ப்புக் கிட்டும்.
சாலமோன் சிறுவனாக இருந்தபோதே இறைவன் அவனிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது, நுண்ணறிவு கொண்டவனாக ஞானத்தை அருளுமாறு வேண்டிக் கேட்டான். அது அவனுக்கு நிறைவாகக் கொடுக்கப்பட்டது. அதனால் பூமியின் நீள அகலத்திற்கு மாட்சியோடு அரசாள அவனுக்கு அருள் கிட்டியது.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்
