LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 17, 2019

பெரியாரைப் புரிந்து கொள்ளல்

70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மக்களின் சமூக விடுதலைக்காக ஓய்வின்றிப் போராடி இந்திய மக்களுக்கான ஒரு சிந்தனை மரபை தோற்றுவித்தவர்களுள் பெரியார் முக்கியமானவராகும். அவருடைய சிந்தனை மரபை விளங்கிக் கொள்ளும் போதுதான் பெரியாரை விளங்கிக் கொள்ள முடியும்.

பெரியாருக்கு முன்பு இரண்டு வித சிந்தனைப் போக்குகள் இருந்தன.

1.        இந்தியாவில் இருந்த நாகரீகமற்ற மக்களை ஓரளவு நாகரீகப்படுத்தியவர்கள் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவில் குடியேறிய ஆரியர்கள் என்பது, அவர்களே உயர்ந்தவர்கள்.

2.        ஆரிய மொழியான சமஸ்கிருதம் உயர்ந்த மொழி, அதில் கூறப்படுகின்ற அனைத்தும் உயர்ந்த எண்ணக்கருக்கள், சமூகம் அதையொட்டி ஒழுகுதல் வேண்டும் என்பது.

இந்த இரு போக்குகளில் இருந்தும் விலகி இதனை விமர்சித்து, கிண்டலடித்து இந்தியப் பண்பாட்டினூடாக மேற்கிளம்பிய சிந்தனையாளர்களே அம்பேத்கார், பெரியார், அயோத்திதாச பண்டிதர், கோசாம்பி, ராகுல்சாங்கிருத்தியாயன் போன்றவர்களாவர்.

பெரியார் தனது சிந்தனையை 'பகுத்தறிவு' என்பார். இவருடைய பகுத்தறிவு என்பது உய்த்தறிவாக அன்றி அனுபவவாத அறிவாக இருப்பதைக் காணலாம். இந்த அனுபவ அறிவு அவரை திராவிடம் தொடர்பான நிலைப்பாட்டுக்கு கொண்டு செல்கின்றது. குறிப்பாக சிந்துவெளிநாகரீக கண்டுபிடிப்புக்கள், கால்ட்டு வெல்லின் மொழி ஆராய்ச்சி திராவிட மொழிக் குடும்பத்தை தனித்துவமான மொழிக்குடும்பமாக எடுத்துக்காட்டுதல் போன்றன ஆரியத்துக்கு மாற்றாக திராவிடத்தை முன்வைப்பதற்கான விஞ்ஞான அடிப்படைகளை அவருக்கு வழங்கியிருந்தன.

பெரியாரின் பகுத்தறிவு ஒரு ஏட்டறிவாக அன்றி சமூகமாற்றத்துக்கான ஓர் ஆயுதமாக பகுத்தறிவை அவர் முன்னிறுத்துகின்றார். பல நூற்றாண்டுகளாக மனித மனதில் பதியப்பட்ட சமூகம் தொடர்பான பல மூட நம்பிக்கைகளை  உடைத்து சரியான அறிவை உண்டு பண்ணுவதற்காக கடுமையாக உழைத்தார். 'உலகிலுள்ள மற்ற சமூதாயங்களைப் போலத் தமிழ்ச் சமுதாயத்தையும் மானமும் அறிவும் உள்ள சமூகமாக மாற்றுகின்ற பணியைத் தலைமேற் போட்டுக் கொண்டவன் நான்' என்பார். இந்தச் சமூக மாற்றத்தை, சமூகச் சீர்திருத்தத்தின் மூலம் செய்யலாம் என அவர் கருதவில்லை. ஒரு புரட்சியாகப் பார்க்கின்றார்.

1933ம் ஆண்டு கோவையில் பேசும்போது, 'நமது இயக்கம் சீர்திருத்த இயக்கமல்ல. அழிவு வேலை இயக்கம். இன்றைய நிலையில் சமத்துவத்தன்மைக்கு மதசம்பந்தமாக, கடவுள் சம்பந்தமாக, பொருளாதார அரசியல் சம்பந்தமாக அனுகூலமானவை இல்லை. ஆகவே எப்படிச் சீர்திருத்தம் செய்வீர்கள்? இவைகளில் செய்யும் சீர்திருத்தம் இவை இன்னும் நெடுங்காலத்திற்கு நிலைத்து இருக்கத்தான் பயன்படுமே தவிர மாறுதலை உண்டாக்க முடியாது. வேகமாய் போவதற்கு இடையூறாய் கடவுளும் மதமும் அரசாங்கமும் குறுக்கே போடப்படுகின்றன. இவற்றை ஒழிக்க வேண்டும். நாம் பொதுநலச் சேவைக்காரர்கள் அல்ல. புரட்சிக்காரர்கள் நமக்கு சீர்திருத்தங்களும் பொதுநலச் சேவைக்காரர்களும் பெரிய விரோதிகள், தலைகீழாய்க் கவிழ்ப்பதுதான் புரட்சி. இது குற்றமானால் இதை ஒவ்வொருவரும் குஷாலாகச் செய்ய வேண்டியதுதான்' என்பார்.

இந்தப் புரட்சிகரச் சிந்தனை காரணமாக அவரால் மகாத்மா காந்தியுடன் சேர்ந்து அரசியல் விடுதலைப் பயணத்தில் பயணிக்க முடியாமல், காங்கிரசில் இருந்து விலகி நீதிக் கட்சியில் இணைந்து கொள்கிறார். 1940 ல் தனித் திராவிட நாட்டுக் கொள்கையை முன்வைக்கிறார். 1949இல் திராவிட கழகத்தை உருவாக்கி சுயமரியாதைக்கு முக்கியத்தவம் வழங்கிச் செயற்படலானார்.

கடவுள், மதம், சாதி, தேசம், மொழி, முதலான எந்த ஆணைகளுக்குள்ளும் தன்னை இழக்காத சுய உறுதிப்பாடே சுயமரியாதை என வரையறுத்து, அதனையே தனது குறிக்கோளாகக் கொண்டிருந்தார். சுயமரியாதையினைத் தடுக்கின்ற கருவியாக மதத்தினைப் பார்க்கின்றார். இதனால் அவருடைய பெருமளவான விமர்சன மையம் மதமாகவே இருந்தது. 'மார்க்ஸ் மதத்தை “அபின்” என்றார் நான் அதனை “விஷம்” என்பேன்' என மதத்தினை வெறுத்து ஒதுக்கினார். இந்த வெறுப்பு சமஸ்கிருதமயமாக்கப்பட்ட தெய்வங்களும் மதமுமாக இருந்ததே தவிர கிராம மக்களின் தெய்வங்களையும் வழிபாடுகளையும் அவர் தாக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். பிள்ளையார் சிலைகளையும் இராமன் சிலைகளையும்தான் உடைத்தாரே தவிர கிராமத் தெய்வங்களான சுடலை மாடனையோ அல்லது வைரவரையோ அவர் உடைக்கவில்லை என்பது இதற்கு உதாரணமாகும்.

அகில இந்திய தேசியம் குறித்த மலைப்பு அவரிடம் இல்லை. அது வைதீக மேட்டுக்குடிகளின் அதிகாரம் நோக்கிய நகர்வு என்பதில் பெரியார் தெளிவுடன் இருந்தார். இந்த ஆரியத் தேசியம் பல வட்டார அடையாளங்களை அழித்து விடும் கருத்தியல் என்பார். தான் வரித்துக் கொண்ட சுயமரியாதையைப் பேண ஆரிய மாயையான தேசியத்தை அணுகாதிருத்தல் அதாவது பார்ப்பனியத்தை தள்ளி வைத்தல் என்ற அச்சில் இயங்கினார். இதன் காரணத்தினாலத்தான் அவரிடம் இந்திய தேசியத்துக்கு மாற்றான திராவிட தேசியத்தை முன்மொழிவதற்கு காரணம் எனலாம்.

இந்தச் சிந்தனைப் புலத்தில்தான் இன்றைய எமது இலங்கைச் சமூகநிலமையினைப் பார்க்க வேண்டும். 1960 களில் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் நிகழ்ந்த சாதி எதிர்ப்புப் போராட்டங்களும் ஆலயப் பிரவேசப் போராட்டங்களும் பெரியாருடைய சிந்தனையினாலும் அவருடைய வாரிசுகளான அண்ணாத்துரை, கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் பகுத்தறிவுவாதப் பேச்சுக்களின் செல்வாக்கினால் ஏற்பட்டதாகும். ஆனால் 1970களில் இருந்து ஆரம்பித்த பேரினவாத அரசின் இனவாத அடக்குமுறை காரணமாக தமிழர்கள் தங்களுக்குள் இருந்த உள் முரண்பாடுகளை மறந்து தமிழர்கள் என்ற ஒற்றை அடையாளத்துக்குள்  ஒன்று சோந்தனர். இந்த ஒன்று சேர்தல் எம்மை வெளித்தோற்றத்துக்கு பலமுள்ளவர்களாகக் காட்டினாலும் உள்ளுக்குள் பல அகமுரண்பாடுகளைக் கொண்டவர்களாகவே இருந்தோம். இந்த அகமுரண்பாட்டுடனே எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தோம். எமக்குள் காணப்பட்ட சாதி, மத, பிரதேச முரண்பாடுகளே எமது போராட்டத்தின் தோல்விக்குக் காரணங்களில் ஒன்றாகும்.

தேசிய விடுதலையுடன் சமூக விடுதலையையும் நாம் கையிலெடுத்தக் கொண்டு பயணித்திருக்க வேண்டும் என இன்று பல புத்திஜீவிகள் உணர்கின்றனர். சமூகவிடுதலையை கவனத்தில் கொள்ளாத காரணத்தினால் நாம் எந்தவொரு விடுதலையுமின்றி இலட்சக்கணக்கான உயிர்களையும் உடமைகளையும் இழந்து மீண்டும் 1960ம் ஆண்டுகளுக்கு திரும்பி வந்து நிற்கின்றோம்.

இன்று நாம் இரு விதமான தாக்கங்களுக்கு உள்ளாகின்றோம்.

1.        மத அடிப்படைவாதம்

2.        உலகமயமாக்கம்

மத அடிப்படைவாதம்:

எல்லா மதங்களும் தம்மை மேலும் மேலும் புனிதப்படுத்தி கூர்மைப்படுத்திக் கொண்டு வருவதைப் பார்க்கின்றோம். ஒவ்வொரு மதங்களும் தாம் மட்டுமே உண்மையானது என்றும் மற்றவை அழித்தொழிக்கப்பட வேண்டியவை என்றும் போதிக்கின்றன. இந்த அடிப்படைவாத மதநிலைப்பாடுகளை எதிர்ப்பதற்கான ஒரு கருவியாக பெரியாரிசம் காணப்படுகின்றது.

பெரியாரிசத்தை எமது சமூகச் சூழலுக்கேற்ப புரிந்துகொண்டு பின்பற்றும் போது சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஏற்படுவதுடன் ஒவ்வொரு சமூகங்களும் தமது தனித்துவ பிரதேச  அடையாளங்களை இழக்காமல் சுயமாக சுயமரியாதையுடன் வாழ்வதற்கும் பெரியாரிசம் உதவக் கூடும் எனலாம்.

2.        உலகமயமாக்கம்

முதலாளித்தவமும் பல்தேசியக் கொம்பனிகளும் எல்லாவற்றையும் வர்த்தகப் பொருளாக்கி இலாபம் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன. இதுவும் ஒவ்வொரு பிரதேசங்களின் தனித்துவங்களையும் மரபுகளையும் பழக்கவழக்கங்களையும் அழித்து உலகப் பொதுமைக்குள் எல்லோரையும் கொண்டுவரப் பார்க்கின்றன. இதனை எதிர் கொள்வதற்கு பெரியாரிசம் எமக்கு உதவக்கூடும்.

எனவே பெரியாரை ஒரு மதஎதிர்ப்பு வாதியாக மட்டும் பார்க்காமல் சமூக விடுதலைக்கும் சமூகங்களின் தனித்துவமான இருப்புக்குக்கும் பெரியார் எவ்வகையில் உதவுவார் எனச் சிந்தித்து பெரியாரை அணுகும் போது இன்றைய பல நெருக்கடிகளுக்கு அது பயனுடையதாக இருக்கும் எனலாம்.


   --- கலாநிதி.சு.சிவரெத்தினம் ---



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7